நீண்ட நாட்களாக போயஸ் கார்டனில் தனக்காக கட்டப்பட்டு வரும் வீட்டை நேற்று சசிகலா நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிவுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டணைக்கு பிறகு பெங்களூரு சிறையில் இருந்து கடந்த ஜனவரி மாதம் சசிகலா விடுதலையானார். இதனையடுத்து, கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ஒரு வார ஓய்வுக்குப் பிறகு பிப்ரவரி 8ம் தேதி சென்னை திரும்பினார். அவருக்கு வழிநெடுகிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

பின்னர், தீவிர அரசியலில் ஈடுபட போகிறேன் என்று சொன்ன சசிகலா திடீரென அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். சசிகலாவின் இந்த திடீர் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவர் கடந்த மாதம் தஞ்சாவூர் புறப்பட்டு சென்றார். அங்கிருந்தவாரே ஒரு மாத காலமாக தமிழகம் முழுவதும் கோயில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகளில் ஈடுபட்டு வந்தார். கடந்த வாரம் சென்னை திரும்பிய சசிகலா, தி.நகரில் உள்ள கிருஷ்ணப்பிரியா வீட்டில் தங்கியுள்ளார். 

இந்நிலையில், நீண்ட நாட்களாக போயஸ் கார்டனில் தனக்காக கட்டப்பட்டு வரும் வீட்டை நேற்று சசிகலா நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, விவேக் ஜெயராமன் மற்றும் சசிகலாவின் உறவினர்கள் உடனிருந்தனர். வேதா நிலையம் போன்ற அமைப்பிலேயே இந்த வீடு கட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஊரடங்கு காரணமாக கட்டட பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதனால், சுமார் 2 மணி நேரமாக அங்கேயே இருந்து கட்டட பணிகளை விரைவில் முடிக்க சசிகலா அறிவுறுத்தியதாக தெரிகிறது.

தேர்தல் முடிவு அதிமுகவுக்கு சாதகமாக வராது என தெரிந்த சசிகலா, அதனால்தான் தேர்தலுக்கு முன்பு ஒரு அறிக்கையை வெளியிட்டு கோயில் கோயிலாக சென்றதாகவும், தேர்தல் முடிவுக்குப் பின்னர் தனது தலைமையில் அதிமுக ஒன்றிணையும் என்றும் அவர் நம்புவதாகவும் கூறப்படுகிறது. ஆகையால், தன் தோழி ஜெயலலிதா அரசியல் பயணம் தொடங்கிய போயஸ் கார்டனிலேயே தானும் அரசியல் பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.