Bangalore parappana akrahara jailed AIADMK general secretary Shashikala are reports of severe depression
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கடும் மன உளைச்சலில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதா மரணம் அடைந்தவுடன் அதிமுக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலாவுக்கு அடுத்தடுத்த சறுக்கல்கள் தான் ஏற்பட்டன.

ஆட்சி அமைக்கும் கனவில் மண்ணை அள்ளி அள்ளி போட்டு விட்டார் ஓபி.எஸ். தகர்ந்து போன கனவோடு தம்கட்டி ஒரு வழியாக பெரும்பான்மை எம்.எல்.ஏக்களின் ஆதரவை தக்கவைத்தார்.

அடிமேல் அடிவிழுந்த சசிகலாவுக்கு பேரிடியாக வந்து விழுந்தது உச்சநீதிமன்ற தீர்ப்பு. ஜாமினில் வெளிவரமுடியாத அளவிற்கு தண்டனைக் காலமான 3 வருடம் பத்து மாதங்களை ஜெயலிலில் கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தகவலை கேட்ட மாத்திரத்திலேயே சுக்குநூறாக உடைந்து போனார் சசிகலா... அப்போதே முழுமையான பயம் தொற்றிக் கொண்டது என்னமோ உண்மை. இருப்பினும் கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களுடன் தங்கியிருந்ததால் அரசியல் சூழ்நிலை காரணமாக வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

ஆனால் அன்று இரவே போயஸ் கார்டன் திரும்பிய சசிகலாவை, குடும்பத்தினர் எல்லாம் ஒன்று கூடி கண்ணீர் விட்டு அழுது மனதளவில் மேலும் பாதிப்படையச் செய்து விட்டனர்.
மறுநாள் ஜெயலலிதா சமாதியில் ஆவேசமாக மூன்று முறை சத்தியம் அடித்து விட்டு சரணடையச் சென்ற போது ஜெயலிலுக்கு வெளியே நின்றிருந்த கணவர் நடராஜனைக் கண்டதும், சென்டிமென்டால் உடைந்து அழது விட்டாராம்.

பின்னர் தைரியமாக சிறைச்சாலைக்குள் நடந்தே உள்ளே சென்றாலும் அவர் மனதளவில் இறுக்கமாகவே இருந்தாராம்... அன்றில் இருந்து தற்போது வரை சசிகலா சகஜநிலைக்கு திரும்பவில்லை என்றே கூறப்படுகிறது...
இப்படி சொல்லக் காரணம், கடந்த முறை இதே பரப்பன அக்ரஹரா சிறையில் ஜெயலலிதா சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்ட போது, இரண்டு நாட்களில் தெம்பாகி விட்டாராம் சசிகலா...கட்சி நிர்வாகிகளை வெளியே சென்று சந்திப்பதும், ஜெயலலிதாவுக்கு தேவையான பணிவிடைகளை செய்வது என பரபரப்பாக காணப்பட்டார்.

ஆனால் தற்போதோ நிலைமை முற்றிலுமாக மாறியுள்ளது என்கின்றனர் சிறைச்சாலை மருத்துவமனையில் பணியாற்றும் நபர் மற்றும் சிறைத்துறை உயர் அதிகாரி ஒருவர்.... வெளியில் சொல்லிக் கொள்வது போன்று சசிகலாவுக்கு பேன் தவிர எந்த வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை என்பது தவறான தகவல் ஆகும்...
சசிகலாவுக்குத் தேவையான சகல வசதிகளும், அதாவது கட்டில், ஏர் கூலர், பேன், வீட்டுச்சாப்பாடு, மொபைல் போன், உள்ளிட்ட பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வளவு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தாலும், ஒருவித மன இறுக்கத்தோடும் மன உளைச்சலோடுமே சசிகலா இருப்பதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து உள்விவரம் அறிந்தவர்களிடம் கேட்ட போது, ஒருபக்கம் ஒ.பி.எஸ். அணியில் உள்ள மைத்ரேயன் உள்ளிட்டவர்கள், மத்திய அரசின் லாபியைப் பயன்படுத்திக் கொடுக்கும் தொடர் குடைச்சல்,

மறுபக்கம் தமது குடும்பத்தினரிடையே அவ்வப்போது எழும், குடும்ப அதிகாரப் போட்டிகள் என அடுத்தடுத்து நடக்கும் பின்னடைவுகளால் மிகுந்த மனச்சோர்வுக்கு ஆளாகியிருக்கக் கூடும் என்கின்றனர்.
இவை எல்லாவற்றையும் விட கடந்த முறை இதே பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட போது உற்சாகமாக இருந்ததற்கான முக்கிய காரணமே அப்போது கொடுக்கப்பட்ட தண்டனைக்கு மேல்முறையீடு எனும் வாய்ப்பு இருந்தது. ஆனால் தற்போதோ மேல்முறையீடுக்கு அறவே வாய்ப்பு இல்லை என்பதால் தான், இவ்வளவு மனஉளைச்சலுக்கு சசிகலா ஆளாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
