Sasikala husband Natarajan interviewed

ஜெயலலிதாவிடம் இருந்த நல்ல விஷயம் என்றால், நான் எழுதி கொடுத்த அனைத்து விஷயங்களையும் ஒரு கமா, புல் ஸ்டாப் இல்லாமல் அப்படியே பின்பற்றி வெற்றி கண்டவர் என சசிகலாவின் கணவர் நடராசன் கூறியுள்ளார்.

சசிகலாவின் கணவர் நடராஜன், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்க ஆணையம் அமைத்தே தவறு என்றார். மக்களுக்கு பல சந்தேகங்கள் எழும். ஆணையம் அமைத்ததால் ஜெயலலிதா மரணத்தில் என்ன தெளிவை பெற்றுவிட்டார்கள்? என்று கேள்வி எழுப்பினார். நாளையே ஆணையம் தீர்ப்பு தந்தாலும் அதனால் எதுவும் நடக்கப்போவதில்லை என்றார்.

மறைந்த ஜெயலலிதாவின் உழைப்பால்தான் 2016 ஆம் ஆண்டு அதிமுக அரசு ஆட்சிக்கு வந்தது என்ற அவர், அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்றே சசிகலா விரும்புவதாக கூறினார். ஆனால், எடப்பாடி பழனிசாமி நீடிப்பரா? என்பதில்தான் சசிகலா மாறுபட்டிருப்பதாக கூறினார். தற்போதைய அரசின் செயல்பாடு, மக்கள் விரோத செயல்பாடு என்பதுதான் என்னுடைய நிலைப்பாடாக உள்ளது என்றார்.

எனக்கு நாடு முழுவதும் செல்வாக்கு உள்ளது. ஒரே ஒரு போன் போட்டு என்னுடைய காரியத்தை சாதிக்க முடியும். ஆனால், எந்த தகுதியுமே இல்லாமல் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே மற்றவர்களிடம் தேர்தலில் வெற்றி பெற என்னுடைய தயவு வேண்டும் என்று மிரட்டுவதெல்லாம் ஏற்பதற்கில்லை என்று நடராசன் கூறினார்.

ஜெயலலிதா அறிக்கைகள் எல்லாமே நான் எழுதி கொடுத்தவைதான். நான் போட்டு கொடுத்த இலவச திட்டங்கள்தான் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றன. ஜெயலலிதாவிடம் வாழ்நாள் முழுவதும் இருந்த நல்ல விஷயம் என்றால் நான் எழுதி கொடுத்த அனைத்து விஷயங்களையும் ஒரு கமா, புல்ஸ்டாப் இல்லாமல் அப்படியே பின்பற்றி வெற்றியைக் கண்டார்.

எடப்பாடி பழனிசாமி தன்னுடைய நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அப்படி மாற்றிக் கொள்ளாவிட்டால் அவரை மாற்ற நான் தயங்க மாட்டேன் என்றும் கூறினார். என் மனைவியிடம் இருந்து அதற்கான ஒப்புதலைப் பெற்று, எப்போது வேண்டுமானாலும் நான் அரசியல் களத்தில் இறங்குவேன் என்றார். மேலும் பேசிய நடராசன், ஜெயலலிதாவுக்கு சசிகலா தன்னுடன் மட்டுமே இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததாகவும் கூறினார்.