முதலமைச்சர் பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் அதிமுக இரண்டாக செயல்படுகிறது.
இதையடுத்து தமிழகத்தில் அடுத்தடுத்து உச்சகட்ட பரபரப்பு தெறிக்கிறது.
இதனிடையே முதலமைச்சர் பன்னீர்செல்வமும் சசிகலாவும் தனித்தனியே ஆளுனரை சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
சசிகலா தரப்பும், பன்னீர்செல்வம் தரப்பும் தங்கள் பெரும்பான்மையை நிரூபிப்போம் என ஒருவரையொருவர் போட்டி போட்டுகொண்டு களத்தில் குதித்துள்ளனர்.

சசிகலாவிடம் இருந்த எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பி.க்கள் மக்கள் விருப்பத்திற்கு மதிப்பளித்து பன்னீருக்கு அதரவு தெரிவிப்பதாக அணி மாறி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை வெளியே விடாமல் கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் சிறைபிடித்து காத்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று நானே நேரில் வருகிறேன் என கூவத்தூர் கிளம்பிய சசிகலா எம்.எல்.ஏக்களை தனித்தனியாக நேரில் சந்திக்க ஆலோசனை நடத்தினார்.

என்னை கைவிட்டு விடாதீர்கள் எனவும் சசிகலா எம்.எல்.ஏக்களிடம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதைதொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக எம்.எல்.ஏக்களை சந்திக்க கூவத்தூர் செல்கிறார் சசிகலா.
புறப்படும் முன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது:
எங்களுக்கு இந்த சலசலப்பு புதிது அல்ல.
கஷ்டங்களில் இருந்து மீண்டு கட்சியை கட்டுகோப்பாக நடத்தினார் ஜெயலலிதா.
ஜெயலலிதா இருந்தபோது இதுபோன்ற பல கஷ்டங்களை கூட இருந்து சந்தித்திருக்கிறேன்.

பெண் ஒருவர் அரசியலில் இருப்பது மிகவும் கஷ்டமான விஷயம்.
நான் உயிரை விட்டுவிடுவேன் என ஆளுநருக்கு கடிதம் எழுதியாக போலியான தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
சூழ்ச்சியின் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என அனைவருக்கும் தெரியும்.
எம்.பி.க்கள் பன்னீர்செல்வத்தின் பின்னால் செல்வதின் பின்னணியில் பலர் உள்ளனர்.
ஜனநாயகத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
மீதமுள்ள நான்கரை ஆண்டுகால ஆட்சியை அதிமுக சிறப்பாக வழி நடத்தும்.
ஓ.பி.எஸ் குற்றச்சாட்டுகள் குறித்து உரிய நேரத்தில் பதிலளிப்பேன்
இவ்வாறு அவர் கூறினார்.
