ஓபிஎஸ் தன் இல்லமான தென்பெண்ணை இல்லத்தை விட்டு வேறு எங்கும் செல்வதில்லை. ஒரே ஒரு முறை கவர்னர் இல்லம் சென்றதோடு சரி.

ஆனால் எங்கும் எதற்கும் செல்லாத சசிகலாவை ஜெ. சமாதி, கட்சி தலைமை அலுவலகம், போயஸ் கார்டன் இல்லத்துக்கு வெளியே பேட்டி, 77 கிமீ தூரத்திலுள்ள ரிசார்ட் என சசிகலாவை ஓட விடுகிறார் ஓபிஎஸ்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலாவும், தமிழக முதலமைச்சராக ஓபிஎஸ்சும் பொறுப்பேற்றனர்.

இந்நிலையில் கட்சியும் ஆட்சியையும் ஒரே இடத்தில் தான் இருக்கவேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் சசிகலாவை சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்தனர்.

இதையடுத்து பன்னீர்செல்வம் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

கடந்த 7 ஆம் தேதி திடீரென ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து எழுந்த பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கினார்.

அப்போது கார்டன் வட்டாரங்கள் மீது பல குற்றசாட்டுகளை முன் வைத்தார்.

பின்னர் ஆளுனரை சந்தித்து தன்னை கட்டாயபடுத்தி ராஜினாமா செய்ய வைத்தார்கள் என புகார் தெரிவித்தார்.

தொடர்ந்து சசிகலா ஆளுனரை சந்தித்து தான் யாரையும் கட்டயபடுத்தவில்லை எனக்கூறி எம்.எல்.ஏக்கள் கையொப்பமிட்ட பட்டியலை கொடுத்தார்.

இதனிடையே தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை சசிகலா கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் தங்கவைத்துள்ளார்.

இருந்தாலும் ஓ.பி.எஸ்க்கு ஆதரவு கூடி கொண்டே செல்கிறது.

ஓ.பன்னீர் செல்வத்துக்கு இதுவரையில் 8 எம்.பி.க்களும், 6 எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதுதவிர கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் ஓ.பி.எஸ். வீட்டுக்கு சென்று ஆதரவை தெரிவித்தனர்.

எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்துடன் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்த சசிகலா, ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க கோரியும், அது தொடர்பான அறிவிப்புகள் எதுவும் கவர்னர் மாளிகையில் இருந்து வெளியாகவில்லை.

இதனிடையே நேற்று கூவத்தூர் சென்ற சசிகலா எம்.எல்.ஏக்களை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து கவர்னரின் அழைப்புக்காக காத்திருக்கும் சசிகலா, ஓரளவுக்கு தான் பொறுக்க முடியும். அடுத்த கட்ட போராட்டம் வேறு மாதிரி இருக்கும் என கூறி இருந்தார்.

இது தொடர்பாக போயஸ் கார்டனில் சசிகலா தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இன்று காலையில் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகளான செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் போயஸ் கார்டனுக்கு வந்திருந்தனர்.

அவர்களுடன் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்பது பற்றி, சசிகலா ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

இந்நிலையில், மீண்டும் சசிகலா இன்று கூவத்தூர் ரிசார்ட்டில் உள்ள எம்.எல்.ஏக்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஓபிஎஸ்சுக்கு குவியும் ஆதரவு போயஸ் வட்டாரத்தை ஆட்டம் காண செய்துள்ளது. எம்பிக்களும், கட்சியின் பிரமுகர்களும் ஓபிஎஸ் இல்லம் தேடி வந்து ஆதரவு தெரிவிக்கும் அதே நேரத்தில் அதிமுக பொது செயலாளர் சசிகலா ஓட்டமாய் ஓடிக்கொண்டிருக்கிறார்.