sasikala giving 10 lakhs per month says kumarasamy
பெங்களூரு சிறையில் சிறப்பு சலுகைகள் பெறுவதற்கு சசிகலா ஒவ்வொரு மாதமும் சிறை அதிகாரிகளுக்கு 10 லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுத்து வருவதாக கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூர் பரப்பன அக்ரஹாரம் சிறையில் உள்ள சசிகலாவிற்கு சொகுசு வாழ்க்கை வாழ்வதாகவும் அதற்கு சிறைத்துறை அதிகாரிகள் 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளதாகவும் கர்நாடக சிறைத்துறை டிஜிபிக்கு , சிறைத்துறை டிஐஜி யாக புதிதாக பொறுப்பேற்றிருக்கும் ரூபா அனுப்பிய அறிக்கையில் தெரிவித்திருந்தார். இது குறித்து மீடியாக்களுக்கும் ரூபா பேட்டியளித்திருந்தார்.

இதனிடையில் டிஐஜி ரூபா கொடுத்துள்ள அறிக்கைகள் உண்மைக்கு புறம்பாக உள்ளதாகவும் இது போன்ற சம்பவங்கள் நடக்கவே இல்லை என்று சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணராவ் தெரிவித்திருந்தார்.
அதே நேரத்தில் டிஐஜி ரூபாவின் அறிக்கை குறித்து விரிவான விசாரணை நடத்த முதலமைச்சர் சீதாராமையா உத்தரவிட்டார். இதற்காக தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி, சசிகலாவுக்கு பெங்களூரு சிறையில் சிறப்பு சலுகைகள் அளிக்க மாதம் தோறும் 10 லட்சம் ரூபாய் லஞ்சம் பெறப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இதே போன்று கர்நாடக சிறைகளில் உள்ள பணக்கார கைதிகள் அனைவரும் லஞ்சம் கொடுத்து சுகபோக வாழ்வு வாழ்வதாகவும் குமாரசாமி குற்றம் சாட்டினார்.
