தண்டனைத் தொகை 10 கோடியை கட்டாவிட்டால் மேலும் ஓர் ஆண்டு ஜெயில்…!சசிகலாவுக்கு டிவி, ஃபேன், கட்டில் கொடுத்தது சிறை நிர்வாகம்!
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு விதிக்கப்பட்ட 10 கோடி ரூபாய் அபராதத் தொகையை கட்டாவிட்டால் மேலும் ஓர் ஆண்டு ஜெயிலில் இருக்க வேண்டும் பெங்களூரு சிறை நிர்வாகம் எச்சரித்துள்ளது.
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஜெயலலிதாவுக்கு 100 கோடி அபராதமும்,மற்ற 3 பேருக்கு தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தது,
இந்த தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி குமாரசாமி 4 பேரையும் விடுதலை செய்து உத்தவிட்டார்.
இந்த விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. ஜெயலலிதா இறந்துவிட்ட நிலையில் மற்ற 3 பேருக்கும் சிறப்புநீதி மன்றம் விதித்த தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து சசிகலா உள்ளிட்ட 3 பேரும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் சசிகலா உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட 10 கோடி ரூபாய் அபராதத் தொகையை கட்ட வேண்டும் என சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதை கட்டத் தவறினால் மேலும் ஓர் ஆண்டு சிறையில் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,
இதனிடையே பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் பி 2 பிரிவில் உள்ள சசிகலாவுக்கு கூடுதல் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. ஃபேன், டிவி, கட்டில், சேர், செய்தித்தாள்கள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் சசிகலாவுக்கு சிறையில் தனி அறை வழங்கப்பட்டுள்ளது. அவருடன் இளவரசியும் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் வீட்டு உணவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் இதுவரை சிறை நிர்வாகம் ஏற்கவில்லை.
