நாடெங்கும் நவராத்திரி எனப்படும் தசரா விழாக்கோலம் பூண்டிருக்கும் நிலையில், சிறையினுள் இருந்தபடி ஜெயலலிதாவை அநியாயத்துக்கு மிஸ் பண்ணுகிறார் சசிகலா.  காரணம்?... 

ஜெயலலிதாவின் அதிகார ஆளுமையை அறிந்திருக்கும் அளவுக்கு அவருடைய பயபக்தி பண்புகளை இந்த உலகம் அறிந்து வைத்திருக்கவில்லை! என்பது அழுத்தமான உண்மை. சாமி கும்பிடுவதில் துவங்கி, சாப்பாடு வரை ரொம்பவே மடியானவர் ஜெயலலிதா. 

அதுவும் கோடநாடு பங்களா போய்விட்டாரென்றால் அவரது ஆச்சார அனுஷ்டானங்கள் நாலு மடங்கு அதிகமாகிவிடும். காலையில் எழுந்து ஜன்னல் வழியே கிருஷ்ண பருந்தை பார்த்து வணங்குவதில் துவங்கி, துளசி மாடத்தை சுற்றி வந்து தீர்த்தம் வழங்குவது வரை அம்மாவின் ஆன்மிக அனுஷ்டானங்கள் அடடா ரகங்கள்தான். 

அதுவும் நவராத்திரி காலமென்றால் ஜெ.,வின் பக்திக்கு ஒரு எல்லையே இருக்காது. அது 2009அல்லது 10-ஆம் ஆண்டு. சரியாக நவராத்திரி காலத்தில் ஜெயலலிதா கோடநாட்டில் இருந்தார். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் கோடநாடு பங்களாவில் கொழு அமர்க்களப்பட்டது. விசாலமாக வைத்திருந்தார் கொழுவை.

ஜெ., வின் டேஸ்ட்டுக்கு ஏற்ப சில கொழு பொம்மைகள் இல்லாமல் போக, சசியே காரை எடுத்துக் கொண்டு நேராக ஊட்டிக்கு சென்று பர்சேஸ் செய்திருக்கிறார். அதிலும் ஜெ.,வுக்கு திருப்தி இல்லாமல் போனது. விளைவு கோயமுத்தூரில் காதி பவன்கள் மற்றும் தனியார் கிராஃப்ட் செண்டர்களில் இருந்து பொம்மைகள் பறந்தன, கோடநாடு கொழுவை நிறைத்தன. 

அந்த ஒன்பது நாட்களும் ஜெயலலிதா மாலை வேளைகளில் பளீர் புடவைகளை கட்டிக் கொண்டு, கொழுவுக்கு எதிரே ஒரு நாற்காலியில் அமர்ந்து அம்மன் பாடல்களை பாடி அசத்தினார். சசிகலாவுக்கு அந்த அனுபவம் புதிதில்லை. ஆனால் கோடநாடு பணியாளர்கள் இதையெல்லாம் பார்த்துச் சிலிர்த்துப் போனார்கள். 

தினமும் பலவகையான இனிப்புகள், சுண்டல் படைக்கப்பட்டு, ஜெ., பூஜை செய்து முடித்ததும் அவர் கையாலேயே சசிக்கும், பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. ஜெ.,வுக்கும் சசிக்கும் மறக்க முடியாத கொழு அனுபவம் அது. 

அதன் பின் ஜெ., முதல்வரான பிறகும் போயஸ் கார்டன் இல்லத்தில் தசாரா காலங்களில் கொழுவோற்சவம் தொடந்தது. 
இப்போது சசி அடைபட்டிருக்கும் கர்நாடக மண், தசராவுக்கு உலகப்புகழ் பெற்ற மைசூர் அரண்மனை வீற்றிருக்கும் மண். சிறைக்குள்ளிருக்கும் சசி, பேப்பர்களிலும், டி.வி. சேனல்களிலும் தசரா கொண்டாட்டங்களைப் பார்த்துவிட்டு, ”அக்கா மட்டும் இப்போ இருந்திருந்தா நம்ம கார்டன் வீடோ, இல்லேன்னா கோடநாடு வீடோ கொழுவுல அமர்க்களப்பட்டிருக்கும்.” என்று கண்ணீர் சிந்தியிருக்கிறார். 

அதற்கு அருகிலிருந்த இளவரசி ‘அதெப்டி, அவங்களும் இங்கேதானே நம்ம கூட இருந்திருப்பாங்க!’ என்றாராம் விரக்தியாக. 
சற்றே திணறி தெளிந்த சசி, ‘அக்கா இருந்திருந்தா இங்கேயா இருந்திருப்போம் நாம? இல்ல அரசியல்தான் இப்படி இருந்திருக்குமா?’ என்றிருக்கிறார். 

இது எல்லாமே, பரப்பன சிறையில் சசிக்கு மிக மிக நெருக்கமாகிப் போன சிறை பெண் போலீஸ் சுற்றியிருக்கவே நடந்திருக்கிறது. அவர்களின் வாய்வழியாகவே மெல்ல கசிந்து கொண்டிருக்கிறது. 

அதானே! ஜெயலலிதா இருந்திருந்தால் அரசியல் இப்படியா இருந்திருக்கும்?