அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதா என்பதே சந்தேகம் தான் என்ற அடிப்படையில் அதிமுக அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழில் வெளியாகி உள்ள கவிதை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மாஃபியா தடை, மர்மத்தை உடை என்ற தலைப்பில் வெளியாகி இருக்கும் கவிதையுடன் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் படமும் பிரசுரத்தில் இடம் பெற்றுள்ளது.

 

 ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான எய்ம்ஸ் மருத்துவர்கள் சிகிச்சை எதுவும் செய்யவில்லை என்று அடித்து சொன்னார்களாம் என்று தொடங்குகிறது அந்த கவிதை. ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்ட போது முதலுதவி சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று ஏற்கனவே அப்பல்லோ செவிலியர்கள் சொன்னதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

மேலும் லண்டன் மருத்துவரை வரவழைத்து விசாரித்தால் அவர் அப்பல்லோ மருத்துவமனையை சுற்றிபார்க்க வந்ததாக கூறுவார் என்று கூறப்பட்டுள்ளது. அண்ணா, கண்ணதாசன் மற்றும் எம்.ஜி.ஆர். அமெரிக்கா வரை சென்று சிகிச்சை பெற்ற நிலையில், அப்படிப்பட்ட வெளிநாட்டு சிகிச்சைக்கு ஜெயலலிதாவை கொண்டு செல்லாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. இந்த கேள்விகளுக்கு மாஃபியா கும்பலே விடை சொல், மர்மங்களுக்கு பதில் சொல் என்கிறது அந்த கவிதை.