Sasikala family evacuation from Jayalalithaa Poes Garden House
போயஸ் தோட்டத்தில் குடியேறுவதற்காக சசிகலா குடும்ப உறவுகளுக்குள் குடுமி பிடி சண்டை நடந்தது ஒரு காலம். ஆனால் இன்றோ, போயஸ் தோட்டமா, வேண்டவே வேண்டாம் என்று அவர்கள் ஓட்டம் பிடிக்கும் அளவுக்கு ஆகிவிட்டது.
1989 ல் இருந்து தமிழகத்தின் அதிகார மையமாக திகழ்ந்த போயஸ் தோட்டத்து வேதா நிலையத்தின், அதிர்ஷ்டம் அத்தனையும், ஜெயலலிதாவின் மறைவோடு, புதைந்து போய்விட்டதாகவே கூறுகின்றனர் சசிகலாவின் உறவினர்கள்.
ஜெயலலிதா இருந்த வரை, தலை காட்டாமல் இருந்த, அத்தனை சசிகலா உறவுகளும், அவரது மறைவுக்கு பின்னர் போயஸ் தோட்டத்தில் ஒன்று கூடினர்.
ஆனால், அடுத்தடுத்து நடந்து வரும் அசம்பாவித சம்பவங்களால், தற்போது அவர்கள் யாருமே, போயஸ் கார்டன் பக்கம் தலை வைத்து கூட படுப்பதில்லை.
ஜெயலலிதா, போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்துக்கு வந்த பின் தான், அவரது வாழ்க்கை முன்னேற்ற பாதையில் பயணிக்க ஆரம்பித்தது. சசிகலாவின் ஏற்றமும் அங்கிருந்துதான் தொடங்கியது.
அங்கு வசித்த ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் கரங்களில்தான், கட்சியும் கட்டுக்கோப்பாக இருந்து வந்தது. அந்த அளவுக்கு போயஸ் தோட்டம் அதிர்ஷ்டம் நிரம்பியதாக இருந்தது.
அதன் காரணமாகவே, ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோர், எக்காரணம் கொண்டும் போயஸ் தோட்டத்தை உரிமை கொண்டாடி விட கூடாது என்பதற்கான, அனைத்து வேலைகளையும் செய்தார் சசிகலா.

ஆனால், ஜெயலலிதாவை சிலர் கொன்று விட்டதாக செய்தி பரவியதும், போயஸ் தோட்டத்திற்கு யார் சென்றாலும், அவர்களுக்கு கெட்ட விஷயங்களே நடக்கின்றன.
குறிப்பாக, சசிகலா குடும்பத்தில் துர் சம்பவங்கள் அதிக அளவில் நடக்க ஆரம்பித்து விட்டன. போயஸ் தோட்டத்தில் இருந்த சசிகலா, இளவரசி ஆகியோர், சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்று விட்டனர்.
சசிகலாவின் பொது செயலாளர் பதவிக்கு சிக்கல் வந்துள்ளது. கட்சியின் பெயர் மற்றும் சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டுள்ளது.
சசிகலாவுக்கு வேண்டப்பட்ட சேகர் ரெட்டி சிறையில் அடைக்கப்பட்டார். தலைமைச் செயலராக இருந்த ராம் மோகன் ராவ், வருமானவரி சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பதவி இழந்தார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் வருமானவரி சோதனையில் சிக்கினார். அதை காரணம் காட்டி, தினகரன் போட்டியிட்ட ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
வருமான வரித் துறை சோதனையின்போது, ஆவணங்களை கடத்திய தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் மற்றும் அதிகாரிகளை மிரட்டிய அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ் ஆகியோர் கைதாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தற்போது, சசிகலாவையும், தினகரனையும் அரசியலை விட்டே விரட்டும் வேலை தொடங்கி விட்டது. அத்துடன், முடங்கிக்கிடந்த பெரா வழக்குகள் சுறுசுறுப்பு அடைந்து தினகரனை துரத்த ஆரம்பித்துள்ளன. சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன், அற்ப ஆயுளில் காலமானார்.
எல்லாவற்றுக்கும் மேலாக, இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்த வழக்கில், தினகரன் எந்நேரமும் கைதாகலாம் என்று தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

இவ்வாறு, நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் சசிகலா குடும்பத்தின் நிம்மதியை கெடுக்கும் வகையிலேயே உள்ளன.
அதன் காரணமாகவே, போயஸ் தோட்டம் என்றாலே.. ஆளை விட்டால் போதும் என்று சசிகலா குடும்ப உறவுகள் அனைத்தும் ஓட்டம் பிடிக்கின்றன என்று கூறப்படுகிறது.
