ஆட்சி அமைக்க அனுமதி அளிக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா எழுதியதாக கடிதம் தயாரித்து பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஐடி விங் சார்பில் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் ஆளுநருக்கு எழுதிய கடிதம் போல் போலி கடிதம் ஒன்று கடந்த இரண்டு நாட்களாக வாட்ஸ் அப் , வலைதளங்களில் வேகமாக பரவியது. ஆட்சி அமைக்க அழைக்காவிட்டால் உயிரை மாய்த்து கொள்வேன் அதற்கு நீங்கள் தான் காரணம் எனபது போன்ற அவதூறு வரிகள் இருந்தன. 

இது குறித்த மறுப்பை நேற்று நேரடியாக செய்தியாளர்களிடம் சசிகலா மறுத்தார். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் சார்பில் அதன் தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ் சத்யன் , சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

 புகாரில் எங்களது கழக பொதுச்செயலாளர் சின்னம்மா பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் அவரது கையொப்பம் இட்டு ஆளுநருக்கு கடிதம் எழுதுவது போல் போலியான கடிதத்தை உருவாக்கி அதை சமூக வலைதளங்களில் பரப்பி விட்டுள்ளனர்.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கினை சீர்குலைக்கும் விதத்தில் இது போன்ற போலி கடிதத்தினை உருவாக்கி சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது. போலி கடிதத்தை எழுதியவர்கள் யார் என கண்டுபிடித்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.