ஒ.பி.எஸ்க்கு ஆதரவு அளித்த அனைத்து நிர்வாகிகளையும் கட்சியில் இருந்து நீக்குவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா உத்தரவிட்டுள்ளார்.
கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைகளை மீறியதாக கூறி கட்சியில் இருந்து நீக்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு கடந்த 5 ஆம் தேதி முதல் தமிழக அரசியல் களம் முற்றிலும் மாறியுள்ளது.

சசிகலாவுக்கு எதிராக முதலமைச்சர் பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கினார். இதையடுத்து அதிமுக கட்சி இரண்டாக உடைந்தது. பின்னர், பன்னீருக்கு ஆதரவாக சில எம்.எல்.ஏக்களும், எம்.பி.களும் அணி மாறினார்.
இந்நிலையில் உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் இருந்த சொத்துகுவிப்பு வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வெளியானது.
அதில் சசிகலா, இளவரசி , சுதாகரன் உள்ளிட்டோர் குற்றவாளிகள் எனவும், அவர்களுக்கு தலா 10 கோடி ரூபாய் அபராதம் எனவும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் காலதாமதமின்றி உடனே சசிகலா இளவரசி சுதாகரன் ஆகியோர் பெங்களூர் நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும் என்றும் அறை எண் 48 ல் உள்ள நீதிபதி அசோக் நாராயனனை சந்திக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ரணகளத்திலும் சசிகலா ஒ.பி.எஸ் க்கு ஆதரவு அளித்த அனைவரையும் கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓ.பன்னீர்செல்வம், சி.பொன்னையன், பி.எச்.பாண்டியன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, க.பாண்டியராஜன், மனோஜ் பாண்டியன், கே.ஏ.ஜெயபால், ராஜேந்திர பிரசாத் , பரிதி இளவழுதி உள்ளிட்ட 20 பேரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக உத்தரவிட்டுள்ளார்.
