அதிமுகவுக்கும் சசிகலா மற்றும் தினகரனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்;- அதிமுக விவகாரத்தில் உச்ச நீதிமன்றமே சரியாகத் தீர்ப்பு அளித்துள்ளது. தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை இரட்டை இலை சின்னம், கட்சி இரண்டுமே எங்களுக்குத்தான் என்று சிறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கும் சசிகலா மற்றும் தினகரனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

கட்சி கட்டுக்கோப்பாக இருக்கும்போது போகிறவர்கள், வருகிறவர்கள் எல்லாம் வழக்கு போட்டால் நாங்கள் பொறுப்பாக முடியாது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உள்ளது. அந்தத் தீர்ப்புதான் நிரந்தரம், செல்லத்தக்கது. சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியின் கொடி பறக்கும். பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் உள் நோக்கத்துடன் சில இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடன் தள்ளுபடியால் 16 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்.

திமுகவிலேயே ஏராளமானோர் விவசாயக் கடன் பெற்று, தள்ளுபடியும் பெற்றுள்ளனர். இதனால் தங்கள் கட்சிக்காரர்களே அதிமுகவுக்கு ஓட்டு போட்டுவிடுவார்களோ என்று திமுக பயத்தில் இருக்கிறது. அதனால்தான் குறுகிய மனப்பான்மையுடன், குறுகிய பிரிவனருக்கே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன என கூறியுள்ளார்.