பொது செயலாளர் சசிகலாவை நீக்க தீர்மானம் கொண்டு வந்தால், வன்முறை வெடிக்கும் என டிடிவி தினகரனின் ஆதரவு எம்எல்ஏ மாரியப்பன் கென்னடி கூறியுள்ளார். மாரியப்பன் கென்னடியின் இந்த பேச்சு மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களாக பிளவுபட்டிருந்த எடப்பாடி, ஓ.பி.எஸ். அணிகள் கடந்த வாரம் ஓரணியாக இணைந்தன. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறி, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள், ஆளுநரிடம் தனித்தனியாக கடிதம் கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து, புதுவை ரிசார்ட் ஒன்றில் தங்கிய டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள், ஓ.பி.எஸ்.-க்கு எதிராக பேசி வருகின்றனர். டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி
உள்ளார்.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், வரும் 28 ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில், சசிகலா மற்றும் டிடிவி தினகரனை கடசி பதவிகளில் இருந்து நீக்கவும், இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்டும் என்றும் கட்சியில் நியமிக்கப்பட உள்ள வழிகாட்டு குழுவுக்கும் ஒப்புதல் பெறப்படும் என் தெரிகிறது.

இந்த நிலையில், புதுவை ரிசார்ட்டில் தங்கியுள்ள டிடிவி தினகரனின் ஆதரவாளர் எம்எல்ஏ மாரியப்பன் கென்னடி, சசிகலாவை நீக்குவது குறித்து ஆலோசனை நடத்தினால், தலைமை அலுவலகத்தில் வன்முறை வெடிக்கும் என கூறியுள்ளார். அவர் இவ்வாறு கூறியிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.