சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்பட மூவர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் சிறையில் இருந்துவருகிறார்கள். சசிகலாவின் விடுதலை குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியாகிவருகின்றன. கடைசியாக சசிகலாவின் விடுதலை குறித்து ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவலில் ஜனவரி 27 அன்று சசிகலா விடுதலை ஆகலாம் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த 10 கோடி ரூபாய் அபராதத்தையும் சசிகலா சில தினங்களுக்கு முன்பு செலுத்தினார்.
தற்போது மீண்டும் சசிகலா விடுதலை குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் 3-ம் தேதி சசிகலா விடுதலை ஆவார் என்று புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள் இத்தகவல் குறித்த கசியவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. சசிகலா விடுதலை ஆன பிறகு தி. நகரில் உள்ள இளவரசி வீட்டில் தங்குவார் என்றும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாள் டிசம்பர் 5-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. சசிகலா 3-ம் தேதி விடுதலை ஆகும்பட்சத்தில் 5-ம் தேதி ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருவார் என்றும் கூறப்படுகிறது. இத்தகவலால் அதிமுக மற்றும் அமமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.