சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள ஓ.பன்னீர்செல்வம் பக்கம் 5 எம்.எல்.ஏ.க்கள், 3 எம்.பி.க்கள் வந்த நிலையில், இன்று முக்கிய அமைச்சரான மாஃபா பாண்டியராஜனும் வந்து சேர்ந்துள்ளார்.

மேலும் அதிமுகவின் அமைப்பு செயலாளர்களில் ஒருவராக இருந்த பொன்னையன் திடீரென முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க, ஆளுநர் இனியும் காலம் தாழ்த்தாமல் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கக்கோரி சசிகலா கடிதம் அனுப்பியுள்ளார்.

இதையடுத்து, சசிகலா கூவத்தூர் சென்று நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அவருடன், செங்கோட்டையன், தம்பிதுரை, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்களும் ஆலோசனை நடத்தினர்.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் ஜெயகுமார், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

சசிகலா நடத்திய இந்த ஆலோசனை கூட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களை நட்சத்திர விடுதிக்குள் செல்ல விடாமல் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதனால் போலீசாருக்கும் அவர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதேசமயம் அப்பகுதி பொதுமக்களும் தங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாகவும், சுதந்திரமாக சாலைகளில் நடமாட முடியவில்லை எனவும் குற்றம் சாட்டினர்.