சொத்துக்குவிப்பு வழக்கு  தண்டனையில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி சசிகலா மறுசீராய்வு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு மீது கூடுதல் மனுவை சசிகலா தாக்கல் செய்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில், 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கில் சசிகலா தரப்பில் தாக்கல் செய்த மறுசீராய்வு மனு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது சசிகலா தரப்பில், சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் எனவும், தங்களுக்கு வழங்கப்பட்ட 4 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனவும் கேட்டு கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டது.

சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட பிறகே ஜெயலலிதா காலமானார் என்பதால் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சசிகலா தரப்பில் இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என அவர்கள் தாக்கல் செய்திருந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.