சசிகாவின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள கூவத்தூர் ரிசார்ட்டில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்கள் மீது ரவுடிகள் அடிதடி நடத்தியும் கேமராக்களை பிடுங்கியும் அட்டூழியம் செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் மட்டும்தான் இதுபோன்ற நிலைமை நீடிக்கிறது என பத்திரிக்கையாளர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் 5 நாட்களாக தங்க வைத்துள்ளார்.

இந்த கூவத்தூர் ரிசார்ட் மூன்று பக்கம் நீராலும் ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது.

அப்பகுதி மக்கள் தங்கள் வீட்டிற்கு செல்லவேண்டுமானால் ஒரு வழிப்பாதையையே பயன்படுத்த வேண்டியுள்ளது.

இப்பகுதியில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கபட்டிருந்தனர்.

இந்நிலையில் அப்பகுதியில் வாழும் பொதுமக்களுக்கு பாதைகளில் நடக்க அனுமதி மறுக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும் ரிசார்ட்டில் உள்ள எம்.எல்.ஏக்களை உடனடியாக வெளியேற்றுமாறும் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் பணம் கொடுத்து அவர்களை சரி கட்டியதாக தெரிகிறது.

இதையடுத்து அங்கு 1000 க்கும் மேற்பட்ட போலீசார்களும் 150 க்கும் மேற்பட்ட குண்டர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது சசிகலா இரண்டாவது நாளாக எம்.எல்.ஏக்களை சந்திக்க கூவத்தூர் ரிசார்ட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களை அனுமதிக்கவில்லை என கூறி சாலையில் அமர்ந்து செய்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அங்கு இருக்கும் ரவுடிகள் செய்தியாளர்கள் மீது கல்வீசி அடிதடி நடத்தி வருவதாகவும், செய்தியாளர்களின் கேமராக்களையும் செல்போன்களையும் பறிப்பதாகவும் அங்கு இருக்கும் பத்திரிக்கையாளர்கள் குற்றம் சாட்டினர்.

குண்டர்கள் தாக்குவதை போலீசார் வேடிக்கை பார்பதாகவும், யாருக்காக போலீசார் வேடிக்கை பார்க்கின்றனர் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் எம்.எல்.ஏக்களை சந்தித்துவிட்டு காரில் கிளம்பிய சசிகலாவை பத்திரிக்கையாளர்கள் வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாலை மறியலில் ஈடுபட்டு வரும் செய்தியாளர்களிடம் எம்.எல்.ஏக்கள் சிலர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.