கூவத்தூரில் மறைத்து வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களுடன் அனைத்து பத்திரிக்கையாளர்களையும் அழைத்து “போஸ்” கொடுத்தார் சசிகலா.

அங்கு சுமார் 110 எம்.எல்.ஏக்கள் இருந்ததாக தெரிகிறது. அவர்கள் சசிகலாவுக்கு அதரவாக கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்தியாளர்கள் வீடியோ எடுக்கவும் அனுமதிக்கப்பட்டது.

இன்று இரண்டாவது நாளாக எம்.எல்.ஏக்களை சந்திக்க அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா கூவத்தூர் சென்றார்.

அங்கு ஒவ்வொரு எம்.எல்.ஏக்களிடமும் இன்றும் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.

பின்னர் கூவத்தூரில் உள்ள தனியார் விடுதியில் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

எம்.எல்.ஏக்கள் யாரையும் தான் அடைத்து வைக்கவில்லை.

அவர்கள் ஒரே குடும்பமாக சுதந்திரமாக இருக்கிறார்கள்.

தான் எம்.எல்.ஏக்களை அடைத்து வைத்திருப்பதாக சிலர் கூறுகின்றனர்.

கட்சியில் இருந்து வெளியேறியவர்களும் எதிர்கட்சியினரும் இவ்வாறு தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.

எம்.எல்.ஏக்கள் அனைவரும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்ந்து தொலைபேசியில் பேசி வருகின்றனர்.

அதிமுக ஆட்சியில் பங்கம் வந்து விட கூடாது என்பதற்காக எனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் அனைவரும் கட்டுகோப்பாக உள்ளனர்.

எங்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த எதிர்கட்சியினர் முற்படுகின்றனர்.

எனது அடுத்தகட்ட நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள்

இவ்வாறு கூறினார்.

பேட்டி ஆரம்பத்தில் இருந்து முடியும்வரை சிறிதளவும் சிரிக்காமல் கோபமான முக பாவனையோடு சசிகலா பேட்டியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.