பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விதிமீறி சசிகலா வெளியே சென்றது குறித்து காவல் அதிகாரி ரூபா கூறிய புகார் உண்மையே என விசாரணைக் குழு அறிக்கை அளித்துள்ளது. இதனால், சிறையில் இருந்து வெளியே வருவதில் சசிகலாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.  

சொத்துகுவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பெங்களூரு உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, ஜூலை மாதம் 2017-ம் ஆண்டு சட்டத்துக்குப் புறம்பாக, சிறையிலிருந்து வெளியே சென்று ஷாப்பிங் சென்றார் என்று வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும், கர்நாடகா சிறைத்துறை டி.ஜி.ஜி ரூபா, சசிகலா விதிமுறைகளை மீறி சலுகைகள் அளிக்கப்படுகின்றன என்று குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுகுறித்து விசாரிக்க வினய்குமார் ஐ.ஏ.எஸ் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த குழு மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சிறையில் சலுகைகளைப் பெற சிறைத்துறை அதிகாரியாக இருந்த சத்ய நாராயண ராவிற்கு சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் தந்ததாக வெளியான தகவல் உண்மையே என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இரவு உடையில் சசிகலா சிறையிலிருந்து வெளியேறியுள்ளார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஆதாரமாக சி.சி.டி.வி காட்சிகளும் அளிக்கப்பட்டுள்ளன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வரும் சசிகலா, நன்னடத்தை விதிகளின் அடிப்படையில் விரைவில் வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த அறிக்கை மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அதிமுகவினர் சந்தோஷத்திலும், அமமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.