தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தில் நடைபெறவுள்ள டி.டி.வி.தினகரன் பேரவை ஆலோசனைக் கூட்டத்திற்காக வைக்கப்பட்டிருந்த பேனரை மர்ம நபர் சிலர் தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா மற்றும் ஓபிஎஸ் என அதிமுக இரண்டு அணிகளாக உடைந்தது. இதையடுத்து சொத்துக் குவிப்பு வழக்கில் சசகிலா சிறை சென்றதால் டி.டி.வி.தினகரன் சசிகலா அணியை கவனித்து வந்தார்.

இந்நிலையில் இரட்டை இலை சின்ன வழக்கில் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அந்த அணி அம்மா அணியாக உருவெடுத்தது. 

எடப்பாடி பழனிசாமி அந்த அம்மா அணியை வழிநடத்தி வந்தார். ஆனால் சிறையில் இருந்தது வந்த டி.டி.வி.தினகரன், கட்சிப் பணிகளில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். இதற்கு அமைச்சர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அணிக்கும் டி.டி.வி.தினகரன் அணிக்கும் கடுமையான மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. அமைச்சர் ஜெயகுமார், இபிஎஸ் தான் கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்திச் செல்வதாக தெரிவித்தார்.

இதனிடையே தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தில் நடைபெறவுள்ள டி.டி.வி.தினகரன் பேரவை ஆலோசனைக் கூட்டத்திற்காக வைக்கப்பட்டிருந்த பேனரை மர்ம நபர்கள்  சிலர் தீ வைத்து எரித்துள்ளனர்.

இந்த சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.