சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. சின்னம்மா தலையில் இடி இறக்கிய எடப்பாடி.
சசிகலா குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது, மறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை சசிகலா முதலில் அதிமுக கட்சியிலேயே இல்லை.
சசிகலாவுக்கும், அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் கட்சியிலேயே இல்லை என்றும், எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆளுநரை சந்தித்து மனு கொடுத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார். சிறையில் இருந்து விடுதலையாகி வந்தவுடன் சசிகலா அரசியலில் தீவிரம் காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக வெற்றிக்கு இடையூறாக இருக்க விரும்பவில்லை எனகூறிதுடன், அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்தார் அவர். அது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்துள்ள நிலையில், கட்சி சீரழிவதை இன்னும் வேடிக்கை பார்க்க முடியாது, தீவிர அரசியலுக்கு வரப்போகிறேன் என அறிவித்த சசிகலா, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்திக்க போவதாக அறிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: டாஸ்மாக்கை மூடினால் இதுதான் நடக்கும்.. அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த பயங்கர விளக்கம்.
முன்னதாக கடந்த 16ஆம் தேதி மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அவர், கடந்த நான்கரை ஆண்டுகளாக மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை அம்மாவின் நினைவிடத்தில் இறக்கிவைத்து விட்டேன், கட்சிக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என அம்மாவிடம் கூறிவிட்டுதான் வந்திருக்கிறேன், அதிமுகவையும் தொண்டர்களையும் புரட்சித்தலைவர் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் போகிறேன் என தெரிவித்திருந்தார். அதேபோல தியாகராய நகரில் எம்ஜிஆர் இல்லத்தில் கொடியேற்றிய அவர்,அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டை திறந்து வைத்தார். இது எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுகவில் தனக்கு உள்ள செல்வாக்கையும் அவர் நிரூபிக்க முயற்சித்து வருகிறார் இது எடப்பாடி தரப்பை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதையும் படியுங்கள்: 5 மாத ஆட்சியில் கொள்ளையடித்த பணத்தை வைத்து 1 ஓட்டுக்கு ரூ.1000 கொடுத்தது திமுக.. எடப்பாடி பழனிச்சாமி பகீர்.
இத்தருணத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட அதிமுகவினர் இன்று ஆளுநர் மாளிகையில் சந்தித்தனர் அப்போது 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் முறையாக நடைபெறவில்லை என அவர்கள் புகார் கூறினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை, அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் திட்டமிட்டு நிராகரிக்கப்பட்டது, அதிமுகவினரின் வெற்றிகள் உடனுக்குடன் அறிவிக்கப்படவில்லை, ஆனால் திமுகவினரின் வெற்றிகள் உடனுக்குடன் அறிவிக்கப்பட்டது. மொத்தத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது என அவர் திமுக மீது அடுக்கடுக்காக ஒரு குற்றச்சாட்டை வைத்தார். எனவே நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலை முறையாக விசாரிக்க வேண்டும் என்றும், நகராட்சி மன்ற தேர்தலை நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சசிகலா குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது, மறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை சசிகலா முதலில் அதிமுக கட்சியிலேயே இல்லை. அவர் சொல்வதை, பேசுவதை எல்லாம் நாங்கள் பொருட்படுத்துவதில்லை. சூரியனை பார்த்து ஏதோ என்று சொல்வார்களே, நான் வெளிப்படையாக கூற முடியாது என்றார். அதேபோல சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்துவது குறித்தும், தான் பொதுச்செயலாளர் என்று பெயர் பலகை திறந்து வைத்துள்ளாரே என்று கேட்டதற்கு, சசிகலா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதாவது பழைய பிரச்சினைகளில் மறந்து ஒன்றாக இணைய வேண்டும் என்று சசிகலாவின் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இவ்வாறு காட்டமாக பதில் அளித்துள்ளார்.