சமந்தா முதல் எடியூரப்பா வரை அத்தனை பேரையும் ஒரு புள்ளியில் இணைத்த சத்குரு: காவிரி கூக்குரலை கொண்டாடும் தேசம்!

இந்த உலகின் பல மூலைகளில் அந்த மண்ணின், அந்த சிற்றூரின், அந்த நகரத்தின், அந்த மாநிலத்தின், அந்த நாட்டின், அந்த துணை கண்டத்தின் தலை எழுத்தையே மாற்றியவை ‘மக்கள் இயக்கங்கள், மக்கள் புரட்சிகள்’ தான். 

ஒரு இயக்கத்தை உருவாக்குவது எளிது, ஆனால் அது வெற்றிபெற வேண்டும், குறி வைத்த இலக்கை அடைய வேண்டுமென்றால் மக்களின் ஆதரவு அதற்கு இருந்தால் மட்டுமே சாத்தியம். அப்படி அபரிமிதமான மக்கள் ஆதரவுடன் ஒரு தேசத்தின் தலையெழுத்தையே மாற்றிப் போட்ட இயக்கங்களும் உண்டு. அதேபோல் மக்களின் அபிமானத்தை, தென்னெழுச்சியை, ஈடுபாட்டினை பெறாத காரணத்தால் துவங்கிய நிலையிலேயே துவண்ட இயக்கங்களும் உண்டு. 


ஆனால் ஈஷா யோகா பவுண்டேஷனின் நிறுவனர் சத்குரு துவங்கியுள்ள ‘காவிரி கூக்குரல்’ இயக்கத்துக்கு அபரிமிதமான மக்களின் ஆதரவும், பங்கேற்பும், கரங்கோற்பும்  துவக்க நிலையிலேயே உருவாகியுள்ளது. இந்த ’காவிரி கூக்குரல்’இயக்கத்தின் ஒரு நிலையாக கர்நாடக மாநிலம் தலைக்காவிரியில் துவங்கி சென்னை வரை பைக்கில் பயணித்து மக்கள் ஆதரவை திரட்டிக் கொண்டிருக்கிறார் சத்குரு. ஆனால் ஏற்கனவே பத்திரிக்கைகள், ஊடகங்கள், சமுகஊடகங்களின் வழியாக தேசம்  முழுக்க இந்த இயக்கம் பற்றிய செய்திகள் பரவிவிட்ட நிலையில் வழியெங்கும் பெரும் திரளான மக்கள் தானாக முன் வந்து ஆதரவை அள்ளித் தருகின்றனர். 

காவிரி பாய்ந்தோடுகிற பாதையில் உள்ள, அவளால் பயனடைகிற மக்கள் மட்டுமல்லாது, காவிரிக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாத பகுதிகளின் மனிதர்களும் இந்த இயக்கத்தை கொண்டாடி, கைகோர்ப்பதுதான் சிறப்பு. அரசியல் தலைவர்கள், விளையாட்டுத்துறை வீரர்கள், பல துறை கலைஞர்கள், இலக்கிய ஆளுமைகள், சினிம பிரபலங்கள் என எல்லோருமே காவிரியின் பிள்ளைகளாய் மாறி கைகோர்த்து ‘காவிரி கூக்குரல்’ இயக்கத்தைக் கொண்டாடுகிறார்கள், சத்குருவோடு கைகோர்க்கிறார்கள். 


தென்னிந்தியாவின் உயிர்நாடியான காவேரி நதிக்கு புத்துயிரூட்டவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள் காவேரி கூக்குரல் என்ற இயக்கத்தை ஆரம்பித்துள்ளார். இவ்வியக்கத்தின் மூலம் கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள காவேரி வடிநிலப் பகுதிகளில் விவசாய நிலங்களில் அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஈஷா அவுட்ரீச் மேற்கொள்ளும் 2-வது நதி மீட்பு களப் பணியாகும்.

இவ்வியக்கத்துக்கு பல்வேறு துறையினரிடம் இருந்து ஆதரவு பெருகி கொண்டே வருகிறது. அவர்கள் சத்குருவை நேரில் சந்தித்தும், சமூக வலைத்தளங்களில் காணொளிகள், புகைப்படங்களை வெளியிட்டும் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் காவேரியை மீட்கும் செயலுக்காக ஆதரவு தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநில முதல்வர் திரு.எடியூரப்பா, தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி.தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் திருமதி.கிரண்பேடி, தமிழக அமைச்சர்கள் திரு.விஜயபாஸ்கர், திரு.காமராஜ், மக்கள் நீதி மையத்தின் தலைவர் திரு.கமலஹாசன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் திரு.சரத்குமார், நாம் தமிழர் கட்சித் தலைவர் திரு.சீமான், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.திருநாவுக்கரசு, தமிழக காங்கிரஸ் தலைவர் திரு.கே.எஸ்.அழகிரி, திருச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு. கே.என்.நேரு, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. பூண்டி கலைவாணன் மற்றும் பாஜகவின் தேசிய செயலாளர் திரு.ஹெச்.ராஜா உள்ளிட்டோர் ஆதரவு தெரித்துள்ளனர்.

விளையாட்டு துறையில் இருந்து இந்திய கிரிக்கெட் வீரர்களான அஸ்வின், கே.எல்.ராகுல், பெண்கள் கிரிக்கெட் அணியை சார்ந்த வேதா கிருஷ்ணமூர்த்தி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மேத்யூ ஹைடன் உள்ளிட்டோரும் தங்களின் ஆதரவை வழங்கியுள்ளனர்.    

சினிமா துறையில் இருந்து தமிழ் திரை பிரபலங்களான நடிகர்கள் திரு.பிரபு, அவரது மகன் திரு.விக்ரம் பிரபு, திரு.சந்தானம், திரு.பிரசன்னா, நகைச்சுவை நடிகர்கள் திரு.மனோபாலா, திரு.தியாகு,  இசை அமைப்பாளர் திரு.இசை அமைப்பாளர் திரு.சங்கர் கணேஷ், நடிகைகள்  திருமதி.சுஹாசினி மணிரத்னம், திருமதி.ரேவதி, திருமதி.ராதிகா சரத்குமார், திருமதி.பூர்ணிமா பாக்யராஜ், திருமதி.சுமலதா, செல்வி.காஜல் அகர்வால், செல்வி.தமன்னா, திருமதி.சமந்தா, செல்வி.திரிஷா, செல்வி.வரலட்சுமி சரத்குமார், செல்வி.ரகுல் ப்ரீத் சிங், நாட்டுப்புற பாடகர்கள் திரு.செந்தில் கணேஷ் மற்றும் திருமதி.ராஜலெட்சுமி, கர்நாடக மாநில திரை பிரபலங்களான புனித் ராஜ்குமார், யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்டோரும் தங்களின் ஆதரவை வழங்கியுள்ளனர்.

சத்குரு அவர்கள் காவேரி பற்றி எழுதிய ஒரு கன்னட பாடலை புனித் ராஜ்குமார் அவர்கள் பாடியுள்ளார். அதேபோல், விஜய் டிவியின் ’சூப்பர் சிங்கர்’ புகழ் திரு.செந்தில் கணேஷ் இவ்வியக்கத்துக்காக ‘வளம் பெற வேணும் காவேரி’ என்ற பெயரில் ஒரு பாடல் பாடியுள்ளார்.