உலகிலேயே மிக உயரமான சிலையாக சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை , 597அடி உயரத்தில் குஜராத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சிலையை வரும் அக்டோபர் 31ஆம் தேதி பிரதமர் மோடி திறந்துவைக்கவிருக்கிறார். நர்மதா அணையை நோக்கி அமைந்திருக்கும் இந்த சிலை ,மோடியின் கனவுதிட்டங்களில் ஒன்று. 

இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேறி இருப்பதை கொண்டாடும் வகையில், பாஜகவினர் இந்த சிலை திறப்புவிழாவை கோலாகலமாக கொண்டாட திட்டமிட்டிருக்கின்றனர்.

இந்த விழாவின் போது இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களையும் கலந்து கொள்ள வைக்க வேண்டும் என திட்டமிட்டிருக்கும் மோடி அரசு, அதற்கான அழைப்பிதழ்களை பாஜக முக்கிய பிரமுகர்கள் மூலம் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் நேரடியாக கொடுக்க செய்திருக்கிறது. இதனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பிதழ் வைக்க ,குஜராத் மாநில சுற்றுலா அமைச்சர் கண்பத் சின்ஹா தமிழகத்திற்கு வருகை தந்திருக்கிறார்.

ஆனால் அவரின் வருகை குறித்து முன்னரே அறிவிக்கப்பட்ட போதும் கூட சரியான வரவேற்பை தமிழக பாஜகவினர் கொடுக்கவில்லை. சென்னைக்கு வருகை தந்த கண்பத் சின்ஹாவின் குழுவினரை நேரில் சென்று வரவேற்க கூட இல்லையாம் தமிழக பாஜகவினர். தமிழக அரசு அதிகாரிகள் தான் அவரை நேரில் சென்று வரவேற்றதுடன், பழனிச்சாமியுடனான சந்திப்பிற்காக அவரை தலைமைச்செயலகம் வரை அழைத்து சென்றிருக்கின்றனர்.

முதல்வரை நேரில் சந்தித்து அழைப்பிதழை கொடுத்த பிறகு அன்று நடந்த பொது நிகழ்வு ஒன்றிலும் கலந்து கொண்டிருக்கிறார் கண்பத் சின்ஹா. அந்த நிகழ்வின் போது தான் அவரை நேரில் சந்தித்திருக்கின்றனர் தமிழக பாஜகவினர். இதனால் கடும் அதிருப்தி அடைந்த கண்பத் சின்ஹா குஜராத் சென்றதும் முதல்வேலையாக இந்த விஷயம் குறித்து மேலிடத்தில்  புகார் தெரிவித்திருக்கிறார்.

உலக அளவில் சாதனை நிகழ்த்தி இருக்கும் இந்த வல்லபாய் பட்டேல் சிலை பற்றி தமிழக பாஜகவினர், மக்கள் மத்தியில் அரசியல்ரீதியாக பிரபலப்படுத்தி இருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை , அழைப்பிதழ் கொடுக்க சென்ற போது கூட மந்தமாகவே செயல்பட்டனர். இப்படி இருந்தால் வரப்போகும் தேர்தலின் போது நிலமை எப்படி இருக்கப்போகிறதோ தெரியவில்லை.. என வசமாக பற்றவைத்திருக்கிறார் கண்பத். 

ஏற்கனவே பிரச்சனை மேல் பிரச்சனையை வளர்த்து அதனால் டோஸ்வாங்கி இருக்கும் ,தமிழிசை,எச்.ராஜா, போன்றோர் இந்த புகாரால் மேலிடத்தில் இருந்து என்ன டோஸ் வரப்போகிறதோ என கலக்கத்தில் இருக்கின்றனர்.