காவிரி விவகாரம் குறித்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்தில் அமைக்க வேண்டும் என்று கடந்த மாதம் 16 ஆம் தேதி மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. ஆனாலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வந்தது. மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அளித்திருந்த காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. இதற்கிடையே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி டெல்லியில் விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.  இந்த போராட்டத்துக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் நேற்று நேரில் சென்று ஆதரவு அளித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், விவசாயிகளுக்காக அ.தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம் நடத்துகிறார்கள். இது மேலும் அழுத்தம் தருவதாக இருக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் கால தாமதம் ஏற்பட்டு உள்ளது. இதில் மத்திய அரசு மீதுதான் தவறு இருக்கிறது. உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகும் இழுத்தடிப்பது சரியல்ல என்று கூறினார். அதிமுக எம்.பி.க்கள் ராஜினாமா செய்து பார்க்கட்டும் என்று தமிழிசை கூறியது கூறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, தமிழிசை எல்லாம் ஒரு சவாலாங்க... அவரெல்லாம் ஒரு லீடரா? தமிழ்நாட்டில் இருந்து கெண்டு அப்படியொரு சவால் விடுவதென்பதெல்லாம் ஒரு தவறான விஷயமாக பார்க்கிறோம். 

தமிழ்நாட்டில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். தொடர்ந்து இப்படி அவருடைய கட்சியினர் பேசுவதால் தமிழக மக்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். மத்தியில் ஆட்சியில் இருக்கக்கூடிய இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிறீர்கள். தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். ராஜினாமா பண்ணிப்பார்க்கட்டு என்று
சொல்வதற்கு இது போட்டிப்போடும் இடம் கிடையாது. போட்டி போடும் இடம் இது அல்ல. இது மக்கள் பிரச்சனை. விவசாயிகளின் பிரச்சனை, தமிழ் இன பிரச்சனை என்று சரத்குமார் கூறினார்.