நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஏன் இவ்வளவு அவசரமாக செயல்படுகிறார் என்ற மர்மம் தெரியவில்லை என்றும், தாத்தா வயதாக இருந்தாலும், அறிமுகம் இல்லாத பெண் செய்தியாளரின் கன்னத்தை தொட்டது தவறு என்றும் சமத்துக மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளைத் தவறானச் செயலுக்கு அழைப்பது தொடர்பான ஆடியோ வெளியாகி பரபரப்பை
ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட பேராசிரியை கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த விவகாரத்தில் பல்வேறு வி.ஐ.பி-க்களுக்குத் தொடர்புள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், ஆளுநருக்குத் தொடர்பிருப்பதாக மார்க்ஸிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியது. இது குறித்து ஆளுநர் தரப்பில் விளக்கம் ஏதும் தரப்படவில்லை. இந்த நிலையில் சென்னை ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது பேசிய ஆளுநர், நிர்மலா தேவியை நான் பார்த்ததுகூட இல்லை என்றார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். செய்தியாளர்கள் உடனான சந்திப்புக்குப் பிறகு, பெண் செய்தியாளர் ஒருவரிடம் சென்ற அவர், நீ என் பேத்தி போல் உள்ளாய் என்று கூறி அவரது கன்னத்தை தடவினார். ஆளுநரின் இந்த செயல் பெண் பத்திரிகையாளர் உட்பட அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய செய்தது.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்-ன் இந்த செய்கையை தாம் வெறுப்பதாக அந்த பெண் பத்திரிகையாளர் டுவிட்டரில் தெரிவித்திருந்தார். என் அனுமதி இல்லாமல் கன்னத்தை அவர் தட்டுவது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் அது தவறு. அறிமுகம் இல்லாத ஒரு நபரின், அதுவும் பெண்ணின் கன்னத்தைத் தொடுவது முறையானது அல்ல. என்னுடைய முகத்தை நான் பலமுறை கழுவிவிட்டேன். இதனால் எனக்கு கோபமும் ஆத்திரமும் வருகிறது என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், பெண் செய்தியாளரின் கன்னத்தில் தட்டியது குறித்து, ஆளுநர் பன்வாரிலால் மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து ஆளுநர் தனது மன்னிப்பு கடிதத்தில் கூறுகையில் எனது பேத்தி போல் இருந்ததால், பெண் செய்தியாளரின் கன்னத்தில் தட்டினேன். பெண் செய்தியாளர் கேட்ட கேள்வியைப் பாராட்டும் விதமாகவே நான் கன்னத்தில் தட்டினேன் என்றும் ஆளுநர் கூறியுள்ளார். இது தொடர்பாக ஆளுநர், சம்பந்தப்பட்ட பெண் பத்திரிகையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மன்னிப்பு கேட்டுள்ளது குறித்து சம்பந்தப்பட்ட பெண் செய்தியாளர், ஆளுநரின் மன்னிப்பை தான் ஏற்பதாக கூறியுள்ளார். ஆனால், ஆளுநர் எனது கன்னத்தில் தட்டியதற்கு அவர் கூறியது சரியான காரணம் அல்ல என்றும் பெண் செய்தியாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், நிர்மலா தேவி பிரச்சனையில் ஆளுநர் ஏன் இவ்வளவு அவசரமாக செயல்படுகிறார் என்ற மர்மம் தெரியவில்லை என்றார். இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட அவருக்கு அதிகாரம் இருந்தாலும், ஆளுநர் வரம்பை மீறி செயல்படுவதைப் போலவே தெரிகிறது. ஒரு மாநிலத்தை ஆளுநர் மேற்பார்வை செய்யலாம். ஆனால் அதிகாரம் செலுத்தக் கூடாது என்றார்.

நிர்மலா தேவியின் பிரச்சனைக்காகவே ஆளுநர் உள்நோக்கத்துடன், செய்தியாளர் சந்திப்பு நடத்தயிருக்கிறார். அந்த சந்திப்பின்போது, அறிமுகமில்லாத பெண் செய்தியாளரின் கன்னத்தை ஆளுநர் தொட்டது வரம்பு மீறிய செயல் என்றார். தாத்தா வயதாகவே இருந்தாலும், நமது தமிழகக் கலாசச்ரப்படி அது தவறு என்றும் சரத்குமார் கூறினார்.