இந்த வரிசையில் நடிகரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியை சேர்ந்த அக்கட்சியின் இளைஞர் அணி மாநில செயலாளர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 

போலி வாரிசு சான்று தயாரித்து சொத்தை அபகரிக்க முயன்ற வழக்கில் ஒரு பெண் உட்பட சமத்துவ மக்கள் கட்சி இளைஞர் அணி மாநில செயலாளர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாளேடுகளில் திறந்தாலே கொலை கொள்ளை ஆட் கடத்தல், பண மோசடி குத்துச் சம்பவம் நிரம்பிக் கிடக்கிறது. அதிலும் அச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலானோர் ஏதாவது ஒரு அரசியல் பின்னணியை கொண்டவர்களாக உள்ளனர் என்பது அதிர்ச்சி கலந்த உண்மையாக இருந்து வருகிறது. இந்த வரிசையில் நடிகரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியை சேர்ந்த அக்கட்சியின் இளைஞர் அணி மாநில செயலாளர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 

சென்னை அயனாவரத்தில் சேர்ந்த சரவணன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அயனாவரத்தில் சேர்ந்த சரவணன் என்பவர் கடந்த 2020ஆம் ஆண்டு சொத்து விவகாரம் தொடர்பாக தனது சகோதரி இளையராணி என்பவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு அவரது தாய் நீலாவதி இறந்த பிறகு அவரது சொத்துக்கள், 100 சவரன் தங்க நகை மற்றும் ஓய்வூதிய 30 லட்சம் ரூபாய் அவருக்கு சொந்தமான கூடுவாஞ்சேரியில் உள்ள நிலம் மற்றும் காலகஸ்தியில் உள்ள 6 ஏக்கர் நிலம் ஆகிய சொத்துக்களை சகோதரியுடன் சரி சமமாக பிரித்துக் கொள்ள திட்டமிட்டிருந்தார்.

இதுதொடர்பாக வடபழனி காவல் நிலையத்தில் ஏற்கனவே எழுதி கொடுத்துள்ளார். இந்த புகார் நிலுவையில் இருக்கும்போது சகோதரி இளையராணி தொடர்ந்து அத்தனை சொத்துக்களையும் பிரிக்காமல் தானே அனுபவித்து வந்ததாகவும் சரவணன் குற்றம்சாட்டினார். இந்நிலையில் அவரது புகார் மீது சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில் கூடுவாஞ்சேரியில் உள்ள சொத்தை சமத்துவ மக்கள் கட்சியின் இளைஞரணி மாநில செயலாளர் கிச்சா ரமேஷ் என்ற நபர் மூலம் இளையராணி போலி வாரிசு சான்றிதழ் பயன்படுத்தி சொத்தை விற்பனை செய்ததும் தெரியவந்தது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக புகார்தாரர் சரவணன் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தற்போது வடபழனி காவல் நிலைய போலீசார் சொத்தை மோசடி செய்து விற்பனை செய்த இளையராணி மற்றும் கிச்சா ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். கைதான கிச்சா ரமேஷ் சரத்குமாருடன் நெருங்கிய நட்பு கொண்டவர் ஆவர். அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.