காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், நடந்தே டெல்லிக்கு செல்வேன் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி, 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் அதேநேரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என கர்நாடக அரசு வலியுறுத்தி வருகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த கால அவகாசம், இந்த மாத இறுதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், வாரியம் அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டதாகவும், ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் வாரியத்தை அமைக்க முடியாது; கூடுதல் காலம ஆகும் எனவும் மத்திய நீர்வளத்துறை செயலர் தெரிவித்தார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தலை கருத்தில்கொண்டே மத்திய அரசு, காலம் தாழ்த்துவதாக தமிழக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கிடையே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்பிக்கள், மூன்று வாரங்களாக நாடாளுமன்றத்தை முடக்கியுள்ளனர்.

இப்படியாக காவிரி மேலாண்மை வாரியம் தான் தற்போது தமிழகத்தின் பிரதான பிரச்னையாகவும் பேசுபொருளாகவும் உள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்காவிட்டால், நடந்தே டெல்லிக்கு செல்வேன் என அதிரடியாக தெரிவித்துள்ளார்.