sarathkumar meet ttv dinakaran after vasan ops meetting
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா வேட்பாளர் டி.டி.வி தினகரனுக்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் களமிறங்குகிறார். இன்று மாலை டி.டி.வி தினகரன் வீட்டிற்கு சென்று சால்வை அணிவித்து தனது ஆதரவை தெரிவித்தார் சரத்குமார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செயல்படுத்தி வருகிறது.
இந்த இடைத்தேர்தலில் போட்டியிட சசிகலா தரப்பில் டி.டி.வி தினகரனும், ஒ.பி.எஸ் தரப்பில் மதுசூதனனும், தீபா பேரவை சார்பில் தீபாவும், திமுக சார்பில் மருதுகணேஷும், தேமுதிக சார்பில் மதிவாணனும், பா.ஜ.க சார்பில் இசையமைப்பாளர் கங்கை அமரனும், சமக சார்பில் அந்தோணி சேவியர் உள்ளிட்ட 127 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
இதையடுத்து தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் மனு பரிசீலனை செய்தார். அப்போது சமக வேட்பாளர் அந்தோணி சேவியரின் மனுவை ஏற்புடையதல்ல என கூறி நிராகரிக்க பட்டது. மேலும் மாற்று வேட்பாளரின் மனுவும் நிராகரிக்கப்பட்டது.
பின்னர், இறுதியாக 62 பேர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் கலைகட்டி வருகிறது. இந்நிலையில், ஒ.பி.எஸ்க்கு தமாக தலைவர் ஜி.கே.வாசன் இன்று காலை ஆதரவு தெரிவித்தார்.
அவரை தொடர்ந்து தற்போது டி.டி.வி தினகரனுக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.
அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பள்ளிகல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார் பேசியதாவது:
ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடரவே தினகரனுக்கு அதரவு அளித்துள்ளோம்.
எந்த ஒரு பிரச்சினைக்காகவும் மற்றவர்கள் ஆட்சியை கலைத்து விடக்கூடாது.
பிளவுபட்ட அணியை ஒருபோதும் ஆதரிக்க போவதில்லை.
டி.டி.வி தினகரனை ஆதரித்து நாளை முதல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம்.
கட்சியில் சில கருத்து வேறுபாடுகள் உள்ளது. அவைகள் களைந்து அனைவரும் ஒன்று சேரவேண்டும்.
இவ்வாறு கூறினார்.
