சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சசிகலாவை அதிமுக கூட்டணியில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்,  ராதிகா ஆகியோர் திடீரென சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி இடம் பெற்று உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் ஒரிரு தொகுதிகள் கொடுத்தால் கூட்டணியில் நீடிக்க மாட்டோம் என்றும் நாங்கள் திருப்தி அளிக்கும் வகையில் தொகுதிகள் கிடைத்தால் மட்டுமே கூட்டணியில் நீடிப்போம் என்றும் சமீபத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்த சரத்குமார் தெரிவித்திருந்தார். ஆனால், அதிமுக கூட்டணியில் உள்ள சரத்குமார் கட்சிக்கு ஒரு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் அதுவும் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில், சென்னை தியாகராயநகர் இல்லத்தில் சசிகலாவுடன் அதிமுக கூட்டணியில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்,  ராதிகா ஆகியோர் திடீரென சந்தித்தனர். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராதிகா சரத்குமார்;- ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி சசிகலாவின் உடல்நலம் பற்றி விசாரித்ததோம். 10 ஆண்டு காலமாக சசிகலாவை எனக்கு தெரியும். சசிகலாவுடன் குடும்பம் போல் பழகியதால் நன்றி மறவாமல் சந்தித்தேன் என கூறியுள்ளார். 

தொடர்ந்து பேசிய நடிகர் சரத்குமார், நன்றி மறப்பது நன்றன்று.. என்ற அடிப்படையில் சசிகலாவை சந்திக்க வந்தேன். உடல்நலம் பற்றி விசாரித்தேன் என்றார். வரும் சட்டமன்ற அமமுகவுடன் இணைந்து சரத்குமார் கட்சி போட்டியிட உள்ளதாகவும் இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.