sarathkumar appeared in IT department

வருமான வரி ஏய்ப்பு விவகாரம் தொடர்பாக நடிகர் சரத்குமார் இன்று மீண்டும் மூன்றாவது முறையாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலத்தில் நேரில் ஆஜராகி உள்ளார்.

நடிகர் சங்க கட்டடம் விவகாரத்தில் பலத்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக நடிகர் விஷால், சரத்குமார் மீது குற்றசாட்டு வைத்தார்.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் சரத்குமாருக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டது. இதையடுத்து நடந்த நடிகர் சங்க தேர்தலில் பலத்த அடிவாங்கிய சரத்குமார் வெளியே தலை காட்டாமல் இருந்து வந்தார்.

ஆனால் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு இரண்டு நாட்கள் யோசித்து சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்.

இதையடுத்து சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார். பின்னர், நான் தனியாக நிற்க போகிறேன், யாருக்காவது ஆதரவு வேண்டுமானால் தன்னை தேடி வரட்டும் என தொலைகாட்சிக்கு பேட்டி அளித்தார்.

பின்னர், ஒ.பி.எஸ்சை பதவியை விட்டு தூக்கியது குறித்து சசிகலாவுக்கு எதிராக கருத்து தெரிவித்த சரத், அடுத்த சில நாட்களில் தினகரனிடம் தஞ்சம் அடைந்தார்.

இவர் ஆதரவு கொடுத்த நேரமோ என்னமோ டிடிவி தினகரனும் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

போகும்போது சும்மா இருந்த நாயை தூ என்று சொல்லிட்டு போ என்ற பழமொழிக்கு ஏற்ப சசிகலா ஜெயிலுக்கு போகும்போது தினகரனை கை காட்டிவிட்டு சென்றார்.

தற்போது தினகரன் ஜெயிலுக்கு போகும்போது சரத்குமாரை கை காட்டி விட்டு சென்று விட்டார் போலும்.

ஒ.பி.எஸ்சிடமும் தினகரனிடமும் பேரம் பேசிய சரத்குமாருக்கு டிடிவி தரப்பு தான் வாரி வாரி கொடுத்ததாம்.

இதையறிந்த வருமான வரித்துறை இனியும் விட்டு வைக்க கூடாது என்று அதிகாரத்தை கையில் எடுத்தது.

அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.ஜி.ஆர். பல்கலைகழக துணைவேந்தரை அடுத்து சரத்குமார் வீட்டில் புகுந்தது வருமான வரித்துறை . அப்போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.

இதைதொடர்ந்து இரண்டு கட்டங்களாக சரத்குமாரிடம் விசாரணை நடத்தியது ஐ.டி.

இதனிடையே சேகர் ரெட்டியிடம் லஞ்சம் பெற்றவர்களின் பெயர் பட்டியலை வருமான வரித்துறை தமிழக அரசுக்கு அனுப்பியது. அதற்கான ஆதாரங்கள் இருப்பதால் லஞ்ச ஒழிப்பு துறை மூலம் நடவடிக்கை எடுக்கலாம் என பரிந்துரை செய்தது.

அந்த பெயர் பட்டியலில் சரத்குமாரின் பெயரும் உள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே கொடுத்த விபரங்களில் ஏகப்பட்ட கேள்விகள் உள்ளதால் மீண்டும் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

இதனால் சரத்குமார் மீண்டும் மூன்றாவது முறையாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலத்தில் ஆஜராகி உள்ளார்.

தற்போது வருமானவரித்துறை உயர் அதிகாரிகளே அவர்கள் அறையில் வைத்து விசாரணை நடத்துகின்றனர்.