டெல்லியில் நடைபெறும் தமிழக விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் எனவும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். 

உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி, 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் அதேநேரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என கர்நாடக அரசு வலியுறுத்தி வருகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த கால அவகாசம், இந்த மாத இறுதியுடன் நிறைவடைகிறது.

கர்நாடக சட்டமன்ற தேர்தலை கருத்தில்கொண்டே மத்திய அரசு, காலம் தாழ்த்துவதாக தமிழக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கிடையே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்பிக்கள், மூன்று வாரங்களாக நாடாளுமன்றத்தை முடக்கியுள்ளனர்.

இதனிடையே இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்காவிட்டால், நடந்தே டெல்லிக்கு செல்வேன் என அதிரடியாக தெரிவித்திருந்தார். 

இதைதொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக காவிரி மேற்பார்வை வாரியம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

இந்நிலையில், வரும் 28-ம் தேதி டெல்லியில்  பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான விவசாயிகள் போராட்டம் நடைபெற உள்ளது. 

இதில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் பங்கேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே  தீர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.