தமிழின் பெருமையையும் தமிழர்களின் உணவையும் பெருமையாகப் பேசிய பிரதமர் மோடி பங்கேற்ற ஐஐடி பட்டமளிப்பு விழாவில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதாகவும் சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டதாகவும் சர்ச்சை கிளம்பியிருக்கிறது.


சென்னை ஐ.ஐ.டி.யின் பட்டமளிப்பு விழாவில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றினார். விழாவில் தமிழின் பெருமையைப் பேசியது ஹைலைட்டாக அமைந்தது. விழாவில், “ உலகிலேயே பழமையான மொழியான தமிழ் மொழியின் தாயகமான தமிழ்நாட்டில் நாம் இருக்கிறோம்” என்று கூறினார். மேலும் தமிழகர்களின் உணவான இட்லி, சட்னி, வடை எல்லாம் மிகவும் பிடிக்கும்” என்றும் பிரதமர் மோடி பேசினார்.


பிரதமர் மோடி தமிழ் பற்றியும் தமிழர்களின் உணவைப் பற்றி பேசியதும் பெரும் வரவேற்புக்குள்ளானது. இந்நிலையில் இந்தப் பட்டமளிப்பு விழாவில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதாக தற்போது சர்ச்சை கிளப்பப்பட்டுள்ளது. இந்த விழாவில் வழக்கத்துக்கு மாறாக சமஸ்கிருத மொழியில் ஸ்லோகங்கள் வாசிக்கப்பட்டதாகவும், சமஸ்கிருத மொழியில் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டதாகவும் சர்ச்சை கிளம்பி உள்ளது.


தமிழைப் பற்றி பெருமையாக பிரதமர் மோடி பேசிய இந்த நிகழ்ச்சியில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதாகவும் கூறி செய்தி வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டிடு ஐஐடி விழா ஒன்றில் தமிழ் வாழ்த்துக்குப் பதிலாக சமஸ்கிருத பாடல் பாடப்பட்டது. அப்போது இந்த நிகழ்வு சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.