முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 19 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை பற்றி பல்வேறு வதந்திகள் கிளம்புவதால் அதிமுக தொண்டர்கள் கலக்கமடைந்து வருகின்றனர். இதனால் கோவில் கோவிலாக, தர்காக்கள், சர்ச்சுகளில் வித விதமாக பிரார்த்தனைகள் செய்கின்றனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழர்களின் பாரம்பரிய வேண்டுதலான மண்சோறு சாப்பிடுவது, தீச்சட்டி, அங்கப்பிரதட்சனம் , அலகு குத்துவது, பால்குடம் , முளைப்பாரி என பல கட்ட பிரார்த்தனைகளை அதிமுக நிர்வாகிகள் முதல் அமைச்சர்கள், அடிமட்ட தொண்டர்கள் வரை நிறைவேற்றி வருகின்றனர். 

இது தவிர அனைத்து மதத்தினரும் பாகுபாடு இல்லாமல் சர்வ மத பிரார்த்தனை செய்து வருகின்றனர். அப்போலோ மருத்துவமனை வளாகமே சின்ன பிரார்த்தனை தளமாக மாறிப்போனது. சர்வ மதத்தினர் பிரார்த்தனை செய்யும் பகுதியாக மாறிபோன அப்போலோவில் இன்று நடந்த சுவாரஸ்யமான விஷயம் அனைவரையும் கவர்ந்தது.

முதல்வர் நலம் பெற வேண்டும் நல்ல செய்தி வரும் என பொதுமக்கள், தொண்டர்கள் அப்போலோ மருத்துவமனை வாசலில் காத்து கிடக்கின்றனர். அப்படி காத்துகிடந்த இரண்டு தொண்டர்கள் தாங்கள் சாப்பிட பிரியாணி வாங்கி வந்தனர். பின்னர் என்ன நினைத்தார்களோ, திடீரென பிரியாணியை சாலையில் கொட்டி அம்மா நலமடைய மண் பிரியாணி வேண்டுதல் என சாப்பிட துவங்கினர். 

இதை பார்த்த அங்கிருந்த செய்தியாளர்கள் அவர்களை புகைப்படம் எடுத்தனர். எந்த வித உள்நோக்கமும் இல்லாமால் தனது தலைவி நலம் பெற வேண்டும் என திடீர் என்ற தோன்றிய எண்ணத்தால் அவார் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை வாயிலையே கோவிலாக பாவித்து உணவை அது பிரியாணி ஆனாலும் என்ன என்று தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிய அந்த இளைஞர்களை அங்குள்ளவர்கள் வாழ்த்தினர்.