அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு வெறும் 110 இடங்கள் மடுமே கிடைக்கும் என்றும், அக்கட்சியின் வீழ்ச்சியை எந்த சாணக்கியனாலும் தடுக்க முடியாது என்றும் அக்கட்சியின் கூட்டணி கட்சியான சிவசேனா சாபம் விட்டுள்ளது.

இது குறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘சாம்னா’ பத்திரிகையில் வெளியாகியுள்ள தலையங்க கட்டுரையில் , பாஜகவின் வலிமைமிக்க கோரக்ப்பூர், புல்பூர் இடைத்தேர்தல் முடிவுகள் அந்த  முகாமில் கலக்கத்தை உண்டாக்கி விட்டது. மத்தியில் மோடியின் ஆட்சி அமைந்த பிறகு நடைபெற்ற 10 பாராளுமன்ற இடைத்தேர்தல்களில் 9 முறை பாஜக  தோல்வி அடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகச்சிறிய மாநிலமான திரிபுரா சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. அந்த வெற்றியின் கொண்டாட்டத்தை ருசிக்க முடியாத வகையில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற இரு தொகுதிகள் நாடாளுமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் அமைந்து விட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடக்கத்தில்  282 நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் இருந்தனர். ஆனால், தற்போது 272 உறுப்பினர்களாக குறைந்துள்ளது. மோடி மற்றும் அமித் ஷாவின் தலைமையின்கீழ் பாஜக ஒவ்வொரு இடைத்தேர்தலிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற உத்தரப்பிரதேசம் சட்டசபை தேர்தலில் 325 இடங்களை பிடித்து பாஜக  அபார வெற்றி பெற்றது. 1991-ம் ஆண்டில் இருந்து கோரக்பூர் பாராளுமன்ற தொகுதியில் யோகி ஆதித்யாநாத் ஒருமுறை கூட வெற்றிபெற தவறியதில்லை.

ஆனால், தற்போது அம்மாநிலத்தின் முதலமைச்சராக  அவர் இருந்தும் அந்த தொகுதியில் அவரது கட்சி தோல்வி அடைந்துள்ளது. பீகாரின் அராரியா பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும், ஜெஹானாபாத் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் ராஷ்டரிய ஜனதா தளம் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவால் முன்பு இருந்ததைபோல் 280 இடங்களை பிடிக்க முடியாது. 100 முதல் 110 இடங்களில்தான் வெற்றி பெறும். நண்பர்களை கைவிட்டு, பொய்யான பாதையில் நடப்பவர்களுக்கு தோல்வி நிச்சயம். வீழ்ச்சி ஆரம்பித்து விட்டால் எந்த சாணக்கியனாலும் அதை தடுக்க முடியாது என்று சாம்னா பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.