salem meeting increased the rating of ops
தமிழகம் முழுவதும் தொண்டர்களை சந்திக்க முடிவெடுத்த பன்னீரின் முதல் கூட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் கொட்டிவாக்கத்தில் நடைபெற்றது. இதில் நல்ல கூட்டம் வந்தாலும், எதிர்பார்த்த அளவு கூட்டம் வரவில்லை என்று பன்னீருக்கு ஒரு வருத்தம் இருந்தது.
அதனால், சென்னையில் தங்கி தினம்தோறும் தம்மை சந்தித்து வந்த, அணியின் மூத்த தலைவர்களை, அவரவர் சொந்த ஊருக்கு போய், அணியை வலுவாக்கும் முயற்சியில் இறங்குங்கள் என்று அனுப்பி வைத்தார் பன்னீர்.
அதன்படி, முதல் ஆளாக தமது சொந்த ஊரான சேலத்திற்கு சென்றவர், செம்மலை. அவர், கொளுத்தும் கத்திரி வெயிலையும் பொருட்படுத்தாமல், கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்தித்து பேசினார்.
இதையடுத்து, நேற்று முன்தினம் பன்னீர் அணியின் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி வீடு அமைந்துள்ள, நெடுஞ்சாலை மற்றும் அதை சுற்றியுள்ள நகர்கள் என பன்னீரின் போஸ்டர்கள் திரும்பும் திசை எல்லாம் ஜொலித்தன.
ஆனாலும், அதற்கு இடையூறு செய்தால் தேவை இல்லாமல் கெட்ட பெயர் வரும் என்று, அதை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார் முதல்வர் எடப்பாடி.
இதையடுத்து, பன்னீர் கலந்து கொண்ட கூட்டத்தில் தொண்டர்கள் நிரம்பி வழிந்ததால், அவருக்கு கட்டுக்கடங்காத உற்சாகம் பிறந்து விட்டது.
கூட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர்களின் எண்ணிக்கை மட்டும் 80 ஆயிரத்திற்கும் மேல் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் உளவுத்துறை சார்பில், வெறும் 22 ஆயிரம் பேர் என்றே தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பிரம்மாண்ட கூட்டத்தை திரட்டிய செம்மலையை, பன்னீர் மனமுவந்து பாராட்டி உள்ளார். கத்திரி வெயிலையும் பொருட்படுத்தாமல், மாவட்டம் முழுவதும் சுற்றி வந்து நிர்வாகிகளை சந்தித்தது, நல்ல பலனை கொடுத்துள்ளது என்று செம்மலையும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.
கூட்டத்தை பார்த்து திக்குமுக்காடிய பன்னீர், கூட்டம் முடிந்து புறப்படும் போது, இனி யாருக்காகவும் விட்டு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. கட்சியும் நமக்குதான், சின்னமும் நமக்குதான் என்று உற்சாகம் பொங்க செம்மலையிடம் குறிப்பிட்டுள்ளார்.
சேலத்தில் திரண்ட கூட்டம் பன்னீரின் ரேட்டிங்கை தாறுமாறாக உயர்த்திவிட்டது என்றே பலரும் கூற ஆரம்பித்துள்ளனர்.
