திராவிட இயக்கத்தை வீழ்த்த நினைப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தான் வீழ்ந்து போவார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சேலத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய அவர், ’’திராவிடம் பணி என்பது வெறும் 100 ஆண்டுகள் மட்டும் இல்லை. 1000 ஆண்டுகள் ஆனாலும், திராவிட கழகத்தின் பணிகள் ஓயாது. தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள், மறியல், மாநாடு, பொதுக்கூட்டங்களை தந்தை பெரியார் நடத்தினார். உலகில் எந்த தலைவரும் செய்ய முடியாததை தந்தை பெரியார் செய்து காண்பித்தார். இதனால் தந்தை பெரியாரை சகாப்தம் என்று அறிஞர் அண்ணா கூறினார்.

பெரியாரின் முயற்சியால் நாம் இட ஒதுக்கீடு, சமூக நீதியை பெற முடிந்தது. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அந்த நிலையை அடைய முடிந்தது. சுயமரியாதை திருமணம், இருமொழி கொள்கைக்கு சட்டம் இயற்றியது, இந்தி எதிர்ப்பு, சொத்தில் பெண்களுக்கு சம உரிமை. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் சட்டம் ஆகியவை தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கருணாநிதி ஆகியோரின் முயற்சியால் கிடைத்தது என்றால் அது மிகையாகாது. இவைகள் எல்லாம் தி.க.,வின் சாதனைகள்.

தி.க.,வும், தி.மு.க.,வும் இரட்டை குழல் துப்பாக்கிகள் என்று அறிஞர் அண்ணா ஏற்கனவே தெரிவித்துள்ளார். அதாவது ஒரு மரத்து கனிகள். நாம் ஒரு தாய் மக்கள். திராவிட இயக்கத்தை வீழ்த்த நினைத்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தான் வீழ்ந்து போவார்கள். இதுதான் வரலாறு. இதற்கு முன்பை விட தற்போது தான் வேகமாக செயல்பட்டு வருகிறோம்.

ஆனால் திராவிடர்காரர்களை தேச துரோகிகளாகவும், பிரிவினைவாதிகளாகவும் சிலர் கூறுகிறார்கள். சர்வாதிகாரத்தை எதிர்த்தால் தேச துரோகியா? ஜனநாயகத்துக்கு ஆபத்து, அச்சுறுத்தல் என்றால் அதை தட்டி கேட்க வேண்டாமா? காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு நடந்து கொண்ட விதத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவிட்டது. இதையெல்லாம் மறைப்பதற்கு தற்போது ப.சிதம்பரம் கைது விவகாரத்தை மத்திய அரசு கையில் எடுத்திருக்கிறது. அவர் மத்திய நிதி அமைச்சராக செயல்பட்டு இருக்கிறார். அவரது கைது என்பது திட்டமிட்டு சதி செயல். ஆனால், இப்போது மத்திய நிதி அமைச்சராக இருக்கிற நிர்மலா சீதாராமன், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவில்லை என்று கூறுகிறார். இந்தியாவில் பொது வங்கிகளில் கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடித்து வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் நபர், தேச பக்தரா? இந்தியாவின் ஜனநாயகத்தை பாதுகாக்க போராடினால் தேச துரோகியா? அவர்கள் மாநிலத்தை பிரிக்கிறார்கள், இங்கு மாவட்டங்களையும் பிரித்து வருகிறார்கள்.