தமிழகத்தில் உள்ள நியாயவிலைக்கடைகளில் ஆவின் பொருட்கள் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனபால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடையில் ஆவின் பொருட்கள்

தமிழக சட்டப்பேரவையில் பால் வளத்துறை மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது,. இந்த மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு எதிர்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் உரையாற்றினர். இதனை தொடர்ந்து பதிலுரை வழங்கிய பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் நுகர்வோர்களின் தேவையை கருத்தில் கொண்டு 10 வகையான புதிய பால் பொருட்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறினார். மேலும் தொடக்க பால் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு ஊதிய நிர்ணயம் பணி வரன்முறை போன்ற கோரிக்கைகளை பரிந்துரை செய்து சமர்ப்பிக்க குழு அமைக்கப்படும் போன்ற அறிவிப்பினை அமைச்சர் நாசர் வெளியிட்டார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் உள்ள 2 கோடி குடும்பங்கள் பயனடையும் வகையில் வருங்காலத்தில் ஆவின் தயாரிப்புகள் அனைத்தும் நியாயவிலை கடைகளில் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.

மீனவர்களுக்காக கூட்டுறவு வங்கி

மேலும் சேலம் கருமந்துறையில், 6 கோடியில் உயர் மரபியல் திறனுள்ள கிடேரி கன்றுகள் வளர்க்கப்படும் என கூறினார். தமிழ் மொழி கல்வியில் 12 ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் பால் உற்பத்தியாளர்களின் வாரிசுக்கு பரிசு வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 சிறந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்படும் என கூறினார். இதனை தொடர்ந்து மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்ட புதிய அறிவிப்பில், கூட்டுறவு வங்கி சேவையை எளிதில் பெறும் வகையில் மீனவர்களுக்கென தனி கூட்டுறவு வங்கி தொடங்கப்படும் என தெரிவித்தார்.