மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள வேலைநிறுத்த போராட்டத்தில் தமிழக அரசு ஊழியர்களும் ஈடுபட திட்டமிட்டுள்ள நிலையில், போராட்த்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு
புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளது. அவர்களை ஆதரிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினரும் முழுமையாக போராட்டத்தில் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத்துறை ஊழியர்கள் முழுமையாக போராட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. இதனையடுத்து போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத்துறை சார்பாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. அதில் போராட்டம் நடைபெறுகிற 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் விடுப்பு வழங்கக்கூடாது என்றும் அப்படி விடுப்பு கேட்டிருந்தால் அதனை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையும் மீறி பணிக்கு வரவில்லையென்றால் சம்பளம் பிடிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கட்
இந்த நிலையில் தலைமைசெயலாளர் இறையன்பு அனைத்து துறை செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அரசு ஊழியர்கள் 28 மற்றும் 29 ஆம் தேதி பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது என்று தெரிவித்துள்ளார். மேலும் அன்றைய தினம் பணிக்கு வந்தவர்கள், வராதவர்கள் பற்றிய தகவல்கள் துறைவாரியாக காலை 10:30 மணிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மத்திய தொழிற்சங்கம் சார்பாக போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த போராட்டத்தில் தமிழகத்தில் இருந்து மட்டும் 50 லட்சம் ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழக தலைமை செயலாளரின் அதிரடி உத்தரவு அரசு ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
.
