சென்னை - சேலம் இடையே 7 ஆண்டுகளுக்குப் பிறகு  விமான சேவை மீண்டும் தொடங்கியது. இந்த விமான சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். 

முதலவர் எடப்பாடி பழனிசாமியுடன்  விழாவில் சபாநாயகர் தனபால், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோரும் இருந்தனர். 

சென்னை - சேலம் விமானத்தில் பயணம் செய்ய ரூ.1499 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தினமும் காலை 9.50 மணிக்கு புறப்படும் விமானம் காலை 10.40 மணிக்கு சேலம் வந்தடையும். சேலத்தில் இருந்து காலை 11 மணிக்கு புறப்பட்டு 11.50 மணிக்கு சென்னையை சென்றடையும்.

சேலத்தில் இருந்து சென்னை செல்லும் விமானம், அங்கிருந்து கடப்பா வழியாக ஐதராபாத் செல்கிறது.

கடந்த 2010 ஆம் ஆண்டில் சேலத்தில் நிறுத்தப்பட்ட விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து செய்தியாளருக்கு பேட்டியளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சிறிய நகரங்களை விமான சேவை மூலம் இணைப்பதால் தொழில்வளர்ச்சி மேம்படும் எனவும் தஞ்சை, நெய்வேலியில் இருந்தும் விமான சேவை தொடங்க மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

விமான சேவையால் புதிய தொழிற்சாலைகள் உருவாகவும் வாய்ப்பு உள்ளது எனவும் இந்த விமான சேவையால் சேலத்தை சுற்றியுள்ள பகுதிகள் வளர்ச்சியடையும் எனவும் தெரிவித்தார்.