Saidai Duraisamy mega-list against Stalin!

மற்ற ரெய்டுகளைப் பற்றி கேட்கும் மு.க.ஸ்டாலின் 2ஜி முறைகேடு பணத்தில் கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் வந்தது உண்மையா? இல்லையா? என்பதையும், ஹம்மர் கார் வாங்கிய விவகாரத்தில் உதயநிதி வீட்டில் ரெய்டு நடந்தது என்னவாயிற்று என்பதையும் ஸ்டாலின் கேட்க வேண்டும் என்று சைதை துரைசாமி கூறியுள்ளார்.

சசிகலா தொடர்புடையவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையின் சோதனை நடத்தப்பட்டது. ஜெயா டிவி, ஜாஸ் சினிமாஸ், கொடநாடு எஸ்டேட், ஜெயலலிதா வாழ்ந்த வீடான வேதா இல்லம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், இது குறித்து, ஜெயா டிவி சிஇஓ, மற்றும் மேலாளர், இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா, ஷகிலா உள்ளிட்டவர்களிடம் வருமான வரித்துறை அரிகாரிகள் விளக்கம் கேட்டனர். பெங்களூரு பரப்பரன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலா, இளவரசி ஆகியோரிடமும் இன்று விசாரணை நடத்த உள்ளதாக தெரிகிறது.

சசிகலா குடும்பத்தினரின் உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனை குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்களின் வீடுகளிலும் சோதனை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும், இலவசமாக கல்வி வழங்குகிறேன் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வரும் சைதை துரைசாமி வீட்டிலும் சோதனை நடத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார்.

மு.க.ஸ்டாலினின் கருத்து குறித்து பதிலளித்த சைதை துரைசாமி, ஸ்டாலின் என் மீது அவதூறு கருத்துகளைப் பரப்பி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். அறக்கட்டளை மூலம் பல உயரதிகாரிகளை உருவாக்கி வருகிறேன். என்னுடைய சேவையைக் களங்கப்படுத்தும் விதத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் மீது வழக்கு தொடருவேன் என்றும் கூறினார்.

கல்வியை இலவசமாக கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் தான் அறக்கட்டளை நடத்தி வருவதாகவும், கல்வியை பணமாக்க நினைத்திருந்தால் ஆண்டுக்கு 120 கோடி ரூபாய் பெற்றிருக்க முடியும் என்றும் அப்போது அவர் கூறினார். 

மேலும் பேசிய அவர், 2ஜி முறைகேடு பணத்தில் இருந்து கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் வந்தது உண்மையா? இல்லையா? என்றும் ஹம்மர் கார் வாங்கிய விவகாரத்தில் ஸ்டாலின் மகன் வீட்டில் ரெய்டு நடந்தது என்னவாயிற்று என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மற்ற ரெய்டுகளைப் பற்றி கேட்கும் மனுநீதி சோழனின் வாரிசு மு.க.ஸ்டாலின் இதையும் கேட்க வேண்டும் என்று மிக காட்டமாக தெரிவித்தார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நிரூபித்தால் பொது வாழ்க்கையை விட்டே செல்கிறேன் என்றும் சைதை துரைசாமி கூறினார்.