ஊழலை எதிர்த்த அன்றே தான் அரசியலுக்கு வந்துவிட்டதாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.

ரஜினி, கமல் ஆகியோர் அரசியல் களம் கண்டுவரும் தருணத்தில் நேர்மையான அதிகாரிகளின் அடையாளமாக திகழும் சகாயம் இப்படி பேசியிருப்பது அவரை அரசியலுக்கு வர வேண்டும் என அழைப்பவர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் நேர்மைக்குப் பெயர்போன அதிகாரியான சகாயம் நேரடி தேர்தல் அரசியலில் ஈடுபட வேண்டும் என பலர் வலியுறுத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் சகாயத்துக்கு ஆதரவாக குரல்கள் எழுந்தன.

இந்நிலையில், சென்னையில் நடந்த விழா ஒன்றில் அதிரடியாக அரசியல் பேசியுள்ளார் சகாயம். அந்த விழாவில் பேசிய சகாயம், சுடுகாட்டில் படுக்க கூட பயமில்லை. ஆனால் சுதந்திர நாட்டில் இருக்கத்தான் பயமாய் இருக்கிறது. ஊழலை எதிர்த்த அன்றே நான் அரசியலுக்கு வந்துவிட்டேன். நான் அரசியலுக்கு வந்துள்ளதை சமூகம் உறுதிசெய்யும். வணிகம் செய்பவர்கள் சூழ்ச்சிக்காரர்கள். அவர்கள்தான் ஆட்சி செய்கிறார்கள் என சகாயம் பேசினார்.