பெரியார் குறித்து ஹெச்.ராஜா கூறிய கருத்தால் ஏற்பட்ட பரபரப்பு ஓரளவுக்கு ஓய்ந்துள்ள நிலையில், நாமக்கல்லில் அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு மர்ம நபர்கள் காவி உடை அணிவித்து சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திரிபுராவில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. இதனைத் தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த புரட்சியாளர் லெனின் சிலை பாஜகவினரால் அகற்றப்பட்டது.

லெனின் சிலை அகற்றப்பட்டது குறித்து பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, இன்று லெனின் சிலை, தமிழகத்தில் நாளை சாதிவெறியர் பெரியாரின் சிலை அகற்றப்படும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அவரின் இந்த பதிவை அடுத்து, பலர் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து கோவையில் உள்ள பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. 

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் இருந்த பெரியாரின் சிலை பாஜகவினரால் சேதப்படுத்தப்பட்டது. சென்னையில் நடந்து சென்ற பிராமணர்களின் பூணூல்
அறுக்கப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தன.

இந்த சம்பவங்கள் நடப்பதற்கு ஹெச்.ராஜான் சர்ச்சைக்குரிய கருத்துதான் காரணம் என்று கூறப்படுகிறது. அவர் மீது புகாரும் கொடுக்கப்பட்டிருந்தன. மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி
தள்ளுபடி செய்திருந்தார்.

ஹெச்.ராஜாவின் சர்ச்சை கருத்தால் ஏற்பட்ட பரபரப்பு தற்போதுதான் ஓரளவு ஓய்ந்துள்ளது. இந்த நிலையில் நாமக்கல்லில் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மர்ம நபர்கள் சிலர் காவி உடை அணிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அண்ணா - எம்ஜிஆர் சிலைகளுக்கு காவி உடை யார் அணிவித்தது என்பது குறித்து போலீசார்
விசாரணை நடத்தி வருகின்றனர்.