காற்று மாசு அதிகரித்து வருவதால் அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு நாடு முழுவதும் தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நாடு முழுவதும் பட்டாசு விற்பனை மற்றும் உற்பத்திக்கு தடை விதிக்க மறுத்து சில கட்டுப்பாடுகளை விதித்தனர். 

அந்த கட்டுப்பாட்டில், லைசென்ஸ் உள்ளவர்கள் மட்டுமே பட்டாசுகளை விற்பனை செய்ய வேண்டும். குறைந்த அளவிலான புகை வெளியிடும் பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். மாசு ஏற்படுத்தும்பட்டாசுகள் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதிக சத்தம் ஏற்படுத்தும் பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது. ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்யக் கூடாது. இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். 

உச்சநீதிமன்றம், பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்க மறுத்த நிலையில், உற்பத்தியாளர்கள் சந்தோஷ மனநிலையில் இருந்தாலும், பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரமே ஒதுக்கப்பட்டுள்ளதற்கு பொதுமக்களில் பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, உச்சநீதிமன்றம் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.  

தீபாவளி பண்டிகைக்கு குறிப்பட்ட நேரத்தல்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற தீர்ப்பு மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளதாகவும் ஹெச்.ராஜா கூறியுள்ளார். ஹெச்.ராஜா, கடந்த சில தினங்களுக்கு முன்பு நீதிமன்றம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பற்றிய கருத்தால், சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்ட நிலையில், தற்போது பட்டாசு வெடிப்பதற்கு கால நேரம் நிர்ணயித்துள்ள உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.