தனது உயிருக்கு ஆபத்து உள்ளதால் பாதுகாப்பு தருமாறு மர்மமரணம் அடைந்த சாதிக் பாட்சா மனைவி ரெஹானா பானு காவல்துறையிடம் மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அப்போதைய மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் துப்பு துலக்க ஆ.ராசாவின் நண்பரும், கிரீன் ஹவுஸ் ப்ரோமோட்டர்ஸ் நிர்வாகியுமான சாதிக் பாட்சாவிடம் விசாரணை நடத்த சிபிஐ நடவடிக்கை மேற்கொள்ள இருந்தது.

இந்த நிலையில், கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 16ம் தேதி சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் சாதிக் பாட்சா பிணமாகக் கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், திமுக புள்ளிகளின் நெருக்கடியினால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மக்களவை தேர்தல் இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அந்த விளம்பரத்தில் ’’கூடாநட்பு கேடாய் முடியும் என்பதற்கு நீ உவமையாய் ஆனாயே.. உன் அன்பு முகம் கூட அறிந்திடா உள் பிள்ளைகள்’’ என கண்ணீர் அஞ்சலியில் வெளியான வாசகங்கள்  திமுக நிர்வாகிகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.  

2ஜி ஊழல் வழக்கில் ஸ்டாலின், அவரது தாயார் தயாளு அம்மாள், தங்கை கனிமொழி மற்றும் முன்னாள் அமைச்சர் ஆ. ராசா ஆகியோருக்கு தொடர்பிருப்பதாக கூறப்பட்டது. இதில் கனிமொழி, ஆ.ராசா இருவரும் திஹார் சிறைவாசம் அனுபவித்தனர். பின்னர் 2ஜி வழக்கில் யாருமே குற்றவாளிகள் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் திமுக காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில் இந்த விவகாரத்தை பாஜக தூசு தட்டி சாதிக் பாட்சா மனைவியை அப்ரூவர் ஆக்கலாம் என பாஜக திட்டமிட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்றிரவு சாதிக்பாட்சாவின் மனைவி ரெஹானா பானு இன்னோவா காரில் துரைப்பாக்கம் சென்று கொண்டிருந்தபோது பள்ளிக்கரணை அருகே கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடந்தினர். இதையடுத்து தன்னைத் தாக்கவே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது என சாதிக்பாட்சாவின் மனைவி ரெஹானா பானு காருடன் சென்னை காவல்துறை ஆணையரிடம்  புகார் அளித்துள்ளார்.

தனது உயிருக்கு ஆபத்து உள்ளதால் தனக்குப் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என ரெஹானா பானு கேட்டுக்கொண்டுள்ளார். தேர்தல் நேரத்தில் இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.