முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது சாதிக் பாஷா மனைவி ரெஹானா பானு உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டியிடம் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாஷா. இவர் கிரீன் ப்ரொமோட்டார்ஸ் எனும் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்தார். 2ஜி வழக்கில் சி.பி.ஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சாதிக் பாஷா கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொலைபேசி மூலம் தனக்கு மிரட்டல்கள் வருவதாக ரெஹானா பானு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

கடந்த 16-ம் தேதி சாதிக் பாஷாவின் 8-வது நினைவுநாளன்று பத்திரிகைகளில் நினைவஞ்சலி விளம்பரம் அவரது குடும்பத்தினரால் வெளியிடப்பட்டது. அந்த விளம்பரத்தில் "கூடா நட்பு கேடாய் முடியும்" என்கிற வாசகம் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் கடந்த ரெஹானா  பானு தனது சகோதரருடன் காரில் அசோக் நகரிலுள்ள தனது நண்பர் இல்லத்துக்கு சென்றுவிட்டு துரைப்பாக்கம் இல்லத்திற்கு திரும்பும் போது, அவரது காரை வழிமறித்த மர்ம நபர்கள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கார் சேதமடைந்தது. இதுதொடர்பாக பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் செவ்வாய்க்கிழமை, தமிழக உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டியிடம் புகார் கொடுத்தார். அதில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுகவைச் சேர்ந்தவர்கள் மீது புகார் அளித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: சாதிக் பாட்ஷாவின் நினைவு தினத்தில் பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கப்பட்டது. அதில், கூடா நட்பு கேடாய் முடியும் என்று வாக்கியம் இடம்பெற்று இருந்தது. அதன்பிறகு, எனக்கு தொடங்கி மிரட்டல்கள் வர தொடங்கியுள்ளது என்றார். திமுகவைச் சேர்ந்த ஒருவர் மறைமுகமாக மிரட்டல் விடுத்தார் என்று சாதிக் பாஷா மனைவி கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.