பா.ஜ.க.,விற்கு எதிராக துஷ்ட சக்திகளை எதிர்கட்சிகள் ஏவி விட்டுள்ளதால் பாஜக தலைவர்கள் மரணமடைந்து வருவதாக அக்கட்சியின் எம்.பியான பிரக்யா கூறியுள்ளார்.

போபாலைச் சேர்ந்த பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் தொடர்ந்து சர்ச்சை கருத்துக்களை கூறி விமர்சனத்திற்கு உள்ளாகி வருபவர். முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான பாபுலால் கவுரின் அஞ்சலி கூட்டத்திற்கு சென்ற எம்.பி., சாத்வி பிரக்யா தாகூர், எதிர்க்கட்சிகள் தீய சக்திகளை பயன்படுத்துகிறார்கள் என்று சந்தேகம் இருப்பதாகவும், இந்த விஷயத்தில், கவனமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’தேர்தல் நேரத்தில் கொடிய சக்தி பாஜகவின் கடின உழைப்பு, தகுதி மற்றும் கட்சியைக் கையாளும் முக்கிய தலைவர்களை பாதிக்கும், ஆழ்ந்த தீங்கு விளைவிக்கும் என்று பாபா என்னிடம் கூறியிருந்தார். இதை தீய சக்திகளை எதிர்க் கட்சிகள் பயன்படுத்துகின்றன. 

எனவே கவனமாக இருங்கள் என்றும் பாபா தெரிவித்தார். ஆனால், கூட்ட நெரிசல் காரணமாக, நான் அவற்றைக் கேட்டு பிறகு மறந்துவிட்டேன். உண்மையில் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் பாபுலால் கவுர், அருண் ஜேட்லி மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் ஜி ஆகியோர் மரணமடைந்து வருகின்றனர். இதைப் பார்க்கும்போது, ​​மகாராஜ் சொன்னது உண்மை என்று தோன்றுகிறது’’ என அவர் தெரிவித்தார்.