பாஜகவில் தான் சேரப்போவதில்லை என்று ராஜஸ்தானில் முதல்வருக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திய சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது.  சச்சின் பைலட்டுக்கு இரு அமைச்சர்கள் உள்பட 16-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், பாஜகவுடன் சேர்ந்துகொண்டு ஆட்சியைக் கவிழ்க்க சச்சின் பைலட் முயற்சிப்பதாக அசோக் கெலாட் தரப்பு கூறியது. இந்த விவகாரத்தில் துணை முதல்வர் பதவி, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் 19 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

 
மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்யா சிந்தியா செயல்பட்டதை போல, ராஜஸ்தானில் சச்சின் பைலட் செயல்படுவதாக காங்கிரஸ் மேலிடத்துக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜகவில் சேரமாட்டேன் என்று சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் அவர் கூறுகையில், “ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடித்து காங்கிரஸை ஆட்சியில் அமர்த்த பாடுபட்டது நான்தான். ஆனால், ராஸ்தான் பாஜக தலைவர்கள் நான் காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் சேரப்போவதாக வதந்திகளை பரப்புகிறார்கள். என்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயல்கிறார்கள்.
என்னை பதவியில் இருந்து நீக்கினாலும் காங்கிரஸ் கட்சியிலேயே நான் நீடிக்கிறேன். பாஜகவுடன் இணைந்து செயல்படவில்லை. அந்த கட்சியில் சேரவும் மாட்டேன். ராகுல் காந்தி கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகிய பின்னர் அசோக் கெலாட்டும், காங்கிரஸ் காரிய கமிட்டியில் உள்ள அவருடைய பழைய நண்பர்களும் எனக்கு எதிராக கூடியுள்ளனர். அதன் காரணமாக எனது சுயமரியாதைக்காகத்தான் நான் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.
முதல்வருடன் தனிப்பட்ட முறையில் எனக்கு பிரச்னை இல்லை. என்னையும் எனது ஆதரவாளர்களையும் ராஜஸ்தான் வளர்ச்சிக்கு உதவ அனுமதிக்கவில்லை. நான் உத்தரவு போட்டால், அதை நிறைவேற்றக்கூடாது என்று அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிடுகிறார். எந்த உத்தரவையும் நான் எனக்காக செய்யவில்லை. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவே செயல்படுகிறோம்.” என்று சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். இதற்கிடையே சச்சின் பைலட்டுடன் சமாதானமாகப் போகவே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.