ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் அதிகார மோதல் ஏற்பட்டது. இதனால், அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் போக்கொடி உயர்த்தினார். அவருக்கு 2 அமைச்சர்கள் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்தனர். இந்த விவகாரத்தில் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக சச்சின் பைலட்டோடு சேர்ந்து சதி செய்வதாக அசோக் கெலாட் புகார் கூறினார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு 15 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்படுவதாகவும் புகார் கூறினார்.


இதனையடுத்து இரு தரப்பும் தங்கள் எம்.எல்.ஏ.க்களை சொகுசு விடுதிகளில் தங்க வைத்தன. இந்தப் பிரச்னையால சச்சின் பைலட் காங்கிரஸ் தலைவர் பதவி மற்றும் துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். கடந்த ஒரு மாதமாக ராஜஸ்தானில் அரசியல் நிலையற்றத்தன்மை நீடித்த நிலையில், டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சச்சின் பைலட் சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நீடித்தது. சந்திப்பின்போது பிரியங்காவும் உடன் இருந்தார். இச்சந்திப்பின்போது எதிர்கால முதல்வர் என்று தன்னை அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை சச்சின் பைலட் வைத்ததாக கூறப்படுகிறது.
சந்திப்புக்குப் பின்னர் இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில், “ராஜஸ்தான் அரசு, காங்கிரஸ் நலனுக்காக பணியாற்றுவதாக சச்சின் பைலட் உறுதியளித்துளார்.” என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே சச்சின் பைலட் எழுப்பிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண பிரியங்கா, வேணுகோபால், அகமது படேல் ஆகியோர் அடங்கிய குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது. இந்த சந்திப்பு காரணமாக ராஜஸ்தானில் நிலவிவந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.