நான் விஜயகாந்தை வைத்து எடுத்த படங்கள் அனைத்தும் புரட்சிகரமான படங்கள். விஜயகாந்த் நடித்த என்னுடைய படங்கள் அனைத்தும் சமூக அநீதியை எதிர்த்து தீயவர்களை எதிர்த்து, தவறானவர்களை எதிர்த்து போராடும் படங்கள், நான் இயக்கி அவர் நடித்த படங்கள் எல்லாமே மக்களுக்காக போராடும் வகையில் இருக்கும்,
சமீபத்தில் வெளியான நடிகர் விஜயகாந்தின் புகைப்படத்தை பார்த்து இயக்குனர் தயாரிப்பாளர் எஸ்.ஏ சந்திரசேகர் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். விஜயகாந்த்தை போல கொடை உள்ளம் படைத்த ஒரு மனிதரை தான் சந்தித்ததே இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
சினிமா தொடங்கி அரசியல் வரை எம்ஜிஆருக்கு அடுத்து உச்சம் தொட்டவர் நடிகர் விஜயகாந்த் என்றே சொல்லலாம். அனைவராலும் கேப்டன் என்று அன்பாக அழைக்கப்படுபவர், தமிழக மக்களின் மனதில் அசைக்க முடியாத அளவுக்கு சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிற நல் மனிதர் என்றே சொல்லலாம். கதாநாயகன் என்றால் உயரமாக பளபளவென வெள்ளையாக இருக்கவேண்டும் என்ற பிம்பம்மை ரஜினிக்கு பின்னால் தனது நடிப்பாலும், ஆற்றலாலும் உடைத்தவர் விஜயகாந்த்.

தனது புரட்சிகரமான வசனங்களால், எதார்த்தமான நடிப்பால் சாமானிய ஏழை எளிய மக்களின் ஆகச்சிறந்த நம்பிக்கைக்குரிய நாயகனாக தனக்கென தனி இடத்தை பிடித்த விஜயகாந்த் பின்னர் அரசியலில் நுழைந்து தனக்கென கட்சியை ஆரம்பித்து, எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து வரை உயர்ந்தார். தன்னை நாடி வரும் ஏழை எளிய மக்களுக்கு எப்போதும் இல்லை என்று சொல்லாத கருணை உள்ளம் படைத்தவர் விஜயகாந்த் என்பது அவரை அறிந்த அனைவருக்கும் தெரியும்.
இதையும் படியுங்கள்; ஓபிஎஸ் எல்லா முடிவுகளையும் யோசித்து தான் எடுப்பார். ஓபி ராஜாவுக்காக வருந்துகிறேன்.. பொளந்து கட்டிய டிடிவி.
படப்பிடிப்பு தளத்தில் கதாநாயகன் முதல் லைட்மேன் வரை அனைவரும் ஒரே மாதிரியாகத்தான் சாப்பிட வேண்டும் என முடிவெடுத்து விதவிதமாக உணவு வழங்கி அழகு பார்த்தவர் விஜயகாந்த். உணவு விஷயத்தில் எல்லோரையும் சமமாக பாவிக்கும் பண்பு எம்ஜிஆருக்கு பின் விஜயகாந்தின் உயர்ந்த குணங்களின் ஒன்றாக இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. அதிமுக- திமுக என்ற கட்சிக்கு மாற்று தேமுதிக தான் என்ற சூழலை உருவாக்கி வளர்ந்து வந்த நிலையில் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் சினிமாவிலும், அரசியலிலும் பெரும் பின்னடைவை சந்திக்க ஆரம்பித்தார் விஜயகாந்த்.
பக்கம் பக்கமாக வசனங்களை பேசி மக்களை ஈர்த்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் பேச முடியாத நிலைக்கு ஆளானார். அந்த அளவிற்கு அவருக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. எதையும் துணிந்து, தைரியமாக கணீர் குரலில் பேசும் விஜயகாந்தின் பேச்சு ஒரு கட்டத்தில் கேட்க முடியாமலேயே போனது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக அவரது ரசிகர்களும் தொண்டர்களும் துயருற்று வருகின்றனர். விஜயகாந்த் இதோ சரியாகி விடுவார், அதோ சரியாகி விடுவார் என அவரது குடும்பத்தார் கூறி வந்தாலும், அது வார்த்தை அளவிலேயே இருந்து வருகிறது. இதனால் அவரது தொண்டர்கள் பெரும் மன உளைச்சலில் தவித்து வருகின்றனர்.
ஆனாலும் பல வெளிநாடுகளுக்கு சென்று அடிக்கடி சிகிச்சை எடுத்துக் கொள்ளும் விஜயகாந்த் விரைவில் குணமடைந்து வருவார் என்ற நம்பிக்கை எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் இருந்து வருகிறது. இந்நிலையில் விஜயகாந்தின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. எப்போதும் கம்பீரமாக காட்சி அளிக்கக் கூடிய விஜயகாந்த் உடல் மெலிந்து, முகத்தோற்றம் மாறி அடையாளம் தெரியாத நிலைக்கு மாறியுள்ளார். அதைப் பார்த்து, விஜயகாந்தின் ரசிகர்கள், தொண்டர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி வருகின்றனர். எங்கள் கேப்டனாக இது.? என்றும் நம்பமுடியாமல் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இன்னும் பலர் கண்கலங்கி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் நடிகரும் இயக்குனரும், நடிகர் இளையதளபதி விஜயின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர், விஜயகாந்தின் புகைப்படத்தை பார்த்து கண்கலங்கியுள்ளார். அந்த நல்ல மனிதருக்கா இந்த நிலை என அவர் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். நடிகர் விஜயகாந்த்துடன் நடித்த திரைப்படங்கள் குறித்து அனுபவத்தை யூடியூப் சேனல் ஒன்றுக்கு பகிர்ந்து கொண்டுள்ள அவர், விஜயகாந்த் குறித்து கூறியிருப்பதாவது:-
நான் விஜயகாந்தை வைத்து எடுத்த படங்கள் அனைத்தும் புரட்சிகரமான படங்கள். விஜயகாந்த் நடித்த என்னுடைய படங்கள் அனைத்தும் சமூக அநீதியை எதிர்த்து தீயவர்களை எதிர்த்து, தவறானவர்களை எதிர்த்து போராடும் படங்கள், நான் இயக்கி அவர் நடித்த படங்கள் எல்லாமே மக்களுக்காக போராடும் வகையில் இருக்கும், இது போன்ற படங்களில் நடித்து நடித்து மக்களுக்காக போராட வேண்டும் என்ற எண்ணம் விஜயகாந்திற்குள் வந்துவிட்டது. அதனால்தான் அவன் துணிந்து அரசியலில் இறங்கினார்.
இதையும் படியுங்கள்; ஸ்டாலின் மருமகன் என்பதால் என் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.. அதை நீக்குங்க, சபரீசன் மனு.. நீதி மன்றம் தள்ளுபடி.
அதில் அவர் அதிகம் சாதித்திருக்க வேண்டியவர். ஆனால் நிலைமை வேறாகி விட்டது எனக் கூறிய அவர், விஜயகாந்தின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்து கண் கலங்கினார். (புகைப்படத்தை பார்த்தபடி) மனுஷன் சார்... நடிகனை தாண்டிய ஒரு மனிதன்.. மனிதநேயம் என்றால் அது விஜயகாந்திடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். நட்புக்கு இலக்கணம் என்றால் அது விஜயகாந்த்தான். இந்த புகைப்படத்தை பார்ப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. கடந்த இரண்டு வருடமாகவே அவரை சந்திக்க வேண்டும் என நான் முயற்சி எடுத்தேன். ஆனால் ஏதோ காரணத்திற்காக அவர்கள் (குடும்பத்தார்) தவிர்த்து விட்டார்கள். என தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
